பெண்ணின் உயிரைப் பறித்த கருத்தடைச் சாதனம்..! | Contraceptive device was reason for woman died

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (12/08/2017)

கடைசி தொடர்பு:22:25 (12/08/2017)

பெண்ணின் உயிரைப் பறித்த கருத்தடைச் சாதனம்..!

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தால் அவர் இறந்தச் சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பெண்ணின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

பெரம்பலுார் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மணிமேகலை. இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன் திருமணமாகி முத்தரசன், பேரரசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன், பெரம்பலுாரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மணிமேகலை இரண்டாவது குழந்தை பெற்றபோது, அவருக்கு 'காப்பர் டி' என்ற கருத்தடை சாதனத்தை மருத்துவர்கள் பொருத்தியிருக்கிறார்கள்.

கடந்த 7-ம் தேதி மணிமேகலைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. வலி தாங்க முடியாமல் பெரம்பலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வந்து சேர்ந்துள்ளார். மணிமேகலையை பரிசோதித்த டாக்டர்கள் ’காப்பர் டி’ யால் இன்பெக்ஸ்ன் ஆகியிருக்கிறது. காப்பர் டி-யை எடுத்துவிட்டால் சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, 9-ம் தேதி மணிமேகலைக்கு காப்பர் டி-யை நர்ஸ் எடுக்கமுயற்சி செய்துள்ளார்.

சரியாக வராததால் அறுவைச் சிகிச்சைக் கருவியைக் கொண்டு எடுக்க முயற்சித்தபோது கர்ப்பப் பையில் ஓட்டை விழுந்தது. இதனையடுத்து சுயநினைவை இழந்த மணிமேகலைக்கு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11 மணியளவில் மணிமேகலை உயிரிழந்தார். சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் நர்ஸ் ஆகியோரைக் கைது செய்யவேண்டும் என்று கூறி ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனையை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினார்கள். 

தகவலறிந்த பெரம்பலுார் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து மணிமேகலையின் கணவர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில், பெரம்பலுார் காவல்துறையினர் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர் சூரியபிரபா மற்றும் நர்ஸ் ரமணிஜீவாகேத்ரின் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பெண்ணின் இறப்புக்கு காரணமான முதுநிலை உதவி மருத்துவர் சூர்யபிரபா, மகப்பேறு உதவியாளர் ரமணி ஜீவாகேத்ரின் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் இணை இயக்குநர் செல்வராஜன்.