இரண்டுமுறை நாடாளுமன்றம் கூடியும் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? - வைகோ கேள்வி

மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசை உதைப்பந்து போல உருட்டி விளையாடுகிறது என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ

கடந்த இரண்டு நாட்களாக திருச்சியில் முகாமிட்டுள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இன்று அக்கட்சியின்  வழக்கறிஞர்கள் அணி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகளான  துரை பாலகிருஷ்ணன், டாக்டர் ரொஹையா, மற்றும் வழக்கறிஞர் வீரபாண்டியன், திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சோமு, புறநகர் மாவட்ட பொறுப்பாளர்  சேரன் ஆகியோருடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'மத்திய பா.ஜ.க அரசு தமிழக அரசை உதைப்பந்து போல உருட்டி விளையாடுகிறது. தமிழகத்தில் இப்போது அபாயமான சூழல்உள்ளது. தமிழகத்தை காங்கிரசும், பி.ஜே.பியும் மாறி மாறி தொடர்ந்து வஞ்சித்து கொண்டே வருகின்றன.

தமிழகத்தின் வாழ்வாதாரமாக இருக்கும் காவிரி பிரச்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது மத்திய அரசு தமிழகத்துக்கு செய்யும் துரோகம். இது தொடர்பான பிரச்னையில் மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி தாக்கல் செய்கிறோம் என்று பதில் அளித்தது.

ஆனால் இரண்டு முறை நாடாளுமன்றம் கூடியும் கூட இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. வறட்சியினாலும், காவிரி வறண்டதாலும் தமிழகம், பாலைவனமாக மாறி வருகிறது. இந்நிலையில் நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் தமிழக வாழ்வாதாரங்களை அழித்து திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு நினைக்கிறது. தமிழர்கள் ஜல்லிக்கட்டை மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு உரிமையையும் விட்டு கொடுக்க மாட்டோம்.

மேலும் ஈழத்தமிழர்கள் குறித்த பிரச்னையில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்த இதே நிலையைத்தான் இப்போதும் கடைபிடிக்கிறோம். ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ம.தி.மு.க. வலியுறுத்திய பிறகுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினார். தஞ்சாவூரில் செப்டம்பர் 15-ம்தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு ம.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ளது. இது நமது முந்தையை மாநாட்டை காட்டிலும் பிரமாண்டமாக அமையும்' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!