வெளியிடப்பட்ட நேரம்: 04:54 (13/08/2017)

கடைசி தொடர்பு:14:56 (09/07/2018)

"31.11.2017 க்குள் கரூர் மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடமே இருக்காது!" - கலெக்டர்

 

 

கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ஊரக பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிக்கும் பழக்கத்தினை முற்றிலும் ஒழித்திடவும், கழிப்பறையை பயன்படுத்தும் பழக்கத்தினை ஏற்படுத்தவும் பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்பு உணர்வு பேரணியை கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார். இப்பேரணி கரூர் திண்ணப்பா கார்னர், பேருந்து நிலையம், ஜவஹர் கடைவீதி வழியாக சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது. இந்த பேரணியில் 350க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

பேரணி முடிவில் பள்ளி மாணவர்,மாணவிகளிடையே கலெக்டர் தெரிவித்ததாவது,  "வருகின்ற 31.11.2017 அன்று கரூர் மாவட்டத்தை திறந்தவெளி மலம் கழிப்பது இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட உள்ளது. அதையொட்டி,மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்பு உணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம்' என்ற இயக்கம் 09.08.2017 முதல் 15.08.2017 வரை நடைபெறுகிறது. இதன்மூலம்,12.08.2017 அன்று கரூர் மற்றும் தாந்தோணி,13.08.2017 அன்று அரவக்குறிச்சி மற்றும் க.பரமத்தி,14.08.2017 அன்று குளித்தலை மற்றும் கிருஷ்ணராயபுரம்,15.08.2017 அன்று தோகைமலை மற்றும் கடவூர் ஊராட்சி ஒன்றியங்களில் விழிப்புணர்வு பேரணிகள் நடத்தப்பட உள்ளன. கிராம அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மக்கள் சந்திப்பு இயக்கம் வீடு வீடாக சென்று கழிப்பறையின் அவசியம் தொடர்பாக விழிப்பு உணர்வு நடவடிக்கை மேற்கொண்டு அரசு மூலம் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட ரூ 12 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதை தெரிவிக்க உள்ளார்கள். 


மாணவ,மாணவிகள் முழுமையாக கழிவறையை பயன்படுத்த வேண்டும். கழிவறை இல்லாதவர்கள் தங்கள் பெற்றோர்களிடமும்,அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடமும்,'கழிவறை கட்ட அரசு மானியம் தருகிறது' என்று எடுத்துக் கூற வேண்டும். இதன்மூலம், அனைவரும் கழிவறையை கட்டி முழுமையாக பயன்படுத்தி திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத கரூர் மாவட்டம் உருவாக அனைவரும் செயல்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.