Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கூட்டம் சேர்ந்தாலே போலீஸ்காரங்க அடிக்கறாங்க': புலம்பும் மெரினா சிறு வியாபாரிகள்!

உலகின் இரண்டாவது மிக நீளமானக் கடற்கரை மெரினா. மெரினாவைக் காண்பதற்காகவே சென்னைக்கு வருவோர் உண்டு அல்லது சென்னை வருவோர்கள் கண்டிப்பாக மெரினாவைக் காணமால் செல்லமாட்டார்கள். சென்னையின் முக்கிய அடையாளங்களில் இருந்து பிரிக்கவே முடியாது ஒன்று மெரினா. குறிப்பாக, ஜல்லிக்கட்டுக்காக எழுந்த மாணவர் புரட்சியின் போது லட்சக்கணக்கில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் குவிந்தபோது உலகின் கவனம் மெரினாவின் பக்கம் திரும்பியது.

மெரினா


மெரினா புரட்சி, தைப்புரட்சி என்று வரலாற்றுப் பக்கங்களில் எழுதப்பட்டு வரும் அந்த தருணத்தில், காவல்துறையின் அராஜகத்தையும் மறக்க முடியாது. அந்தப் புரட்சிக்குப் பிறகு மெரினாவில் மீண்டும் ஒரு போராட்டம் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறை உறுதியாக உள்ளது. தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டாலும், பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி ஆகிய இருவருக்கும் இதில் பயங்கர ஒற்றுமை.

மெரினா


நினைவேந்தல் கூட்டம் நடத்தினாலே குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அளவுக்கு காவல்துறை அடக்குமுறையை கையாண்டு வருகிறது. 24*7 அடிப்படையில் மெரினாவை கண்காணித்து வருகின்றனர் காவல்துறையினர். இதனால் அங்கு எப்போது போனாலும் காக்கி சட்டைகளை காணலாம். கடந்த வாரம் சிவாஜி சிலையை அகற்றுவதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது காவல்துறையினர் மேலும் குவிக்கப்பட்டுள்ளனர். சரி மெரினாவில் இரவு நேரங்களில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய ஒரு நைட் ரவுண்ட் அப் அடித்தோம்.

அஞ்சலை


அந்த நள்ளிரவிலும் மெரினாவை தூய்மைப்படுத்தி அமர்ந்திருந்த துப்புரவுப் பணியாளர் ஒருவரிடம் பேசினோம், "என் பேரு அஞ்சலை. நான் நாலு வருஷமா இங்கதான் துப்புரவுப்பணி செஞ்சுட்டு இருக்கேன். நைட் 10 மணிக்கு வேலை தொடங்கும். கண்ணகி சிலைக் கிட்ட ஆரம்பிச்சு, உழைப்பாளர் சிலை வரை ஒரு ரவுண்ட் போவோம். அப்பறம், அங்கிருந்து கண்ணகி சிலை வரைக்கும் மீண்டும் ஒரு ரவுண்ட் சுத்தம் செய்வோம். அடுத்ததா கண்ணகி சிலை டூ காந்தி சிலை வரைக்கும் போயிட்டு, அங்கிருந்து மீண்டும் கண்ணகி சிலை வரைக்கும் சுத்தப்படுத்துவோம். வேலை முடிய எப்டியும், மூணு, நாலு மணி ஆகிடும்.  நான் வட சென்னைல இருந்து வரேன். காலைல 6 மணிக்கு தான் பஸ் அதுவரை அப்படியே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போய்டுவோம். மத்த நாள்கள விட சனி, ஞாயிறு வந்தாலே எங்களுக்கு தலைவலி. அப்பதான் குப்பை அதிகமா சேரும். அந்தப் போராட்டம் நடந்தப்ப, அந்த தம்பிகளே குப்பைகளை அள்ளிடுவாங்க. எங்களுக்கு பெருசா வேலை இருக்காது. அதுக்கப்பறம் எங்களுக்கு யாரும் உதவுவதில்லை" என்றார்.


காற்று வாங்கியபடி ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒரு அண்ணணிடம் பேசினோம், "என் பேரு குமாரு. திருவல்லிக்கேணிலதான் வீடு. 27 வருஷமா ஆட்டோ ஓட்டேறன். முன்ன எல்லாம் வியாபாரம் இருந்துச்சு. எப்போ அந்த ஓலா, உபர் எல்லாம் வந்துச்சோ அப்ப இருந்து வியாபாரம் படுத்துக்கிச்சு. மீட்டர் ரேட்னாதான் ஜனங்க வராங்க. எந்த ஏரியால ஆட்டோ ஓட்டினாலும், பீச்சாண்ட வந்துப்படுத்தா நிம்மதியா இருக்கும். அருமையான காத்து. வீட்ல கூட இப்படி காத்து வராது. பகல் எல்லாம் உழைச்சுட்டு இங்க வந்தா நல்லா தூங்கலாம். அதான் இங்க வரேன்" என்றார்.

குமார்

 

டி.வி.எஸ் XL-ல் டீ விற்றுக் கொண்டிருந்தவரிடம், சூடாக ஒரு சுக்குக் காபியை வாங்கி ருசித்து விட்டே பேச்சுக் கொடுத்தோம், "என் பேரு சதீஸ். 20 வருஷமா சென்னைல டீ வித்துட்டு இருக்கோம். லைட் ஹவுஸ் கிட்டதான் வீடு. நைட் ஒரு 9.30 மணிக்கு வேலைய ஆரம்பிப்போம். அப்படியே மண்ணடி வரைக்கும் போய் டீ வித்துட்டு வருவோம். ஒரு ரெண்டு, மூணு மணி போல மெரினா வருவோம்.
அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் பிறகு போலீஸ் கெடுபிடி அதிகம் ஆயிடுச்சு. ஒரு ரெண்டு பேரு டீ குடிச்சுட்டு இருந்தாக்கூட கூட்டம் கூட்றீங்களானு எங்களை போலீஸ்காரங்க அடிக்கறாங்க. அதனால, இங்க ஒரு இடத்துல நிலையா இருக்க மாட்டோம். அப்டியே ரவுண்டிங்லயே இருப்போம். என்ன பண்றது பொழப்பப் பார்க்கணும்ல" என்றார் வேதனையுடன்.

சதீஸ்

சுக்குக் காப்பிக்கு காசு கொடுத்துவிட்டு மெரினா சாலையில் ஒரு ரவுண்ட்ஸ் வந்தோம். ஏற்கெனவே, காவலர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியூர்களில் இருந்தெல்லாம் காவலர் குவிக்கப்பட்டுள்ளனர். இப்படியே சென்றால், மெரினாவில் மனிதர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கூட ஒரு நாள் அறிவிப்பு வரலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement