நீட் அவசர சட்டம் ... அடுத்தடுத்த திருப்பம்! | NEET Emergency Law : Tamilnadu health secretary Radhakrishnan moves delhi

வெளியிடப்பட்ட நேரம்: 14:17 (13/08/2017)

கடைசி தொடர்பு:14:17 (13/08/2017)

நீட் அவசர சட்டம் ... அடுத்தடுத்த திருப்பம்!

நீட்  தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க தயார் என்று மத்திய இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி செல்கிறார்.  நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

neet
 

நீட் தேர்வு குறித்து மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினார். இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘நீட் தேர்வில் நிரந்திர விலக்கு என்பதே கிடையாது. தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் மட்டும் நீட் தேர்விலிருந்து ஓராண்டு காலத்துக்கு விலக்கு அளிக்க முடியும். குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் இந்த ஓராண்டு கால விலக்கு அளிக்க முடியும். அதுவும், விலக்கு வேண்டும் எனக் கோரி அவசரச்சட்டம் இயற்றினால் மட்டுமே மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும்’ எனக் கூறினார்.

இதனைதொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவசர ஆலோசனை நடத்தினார்.

‘மத்திய அரசு தமிழகத்துக்கு நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு தர ஒத்துழைப்பு அளிக்க தயார் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசின் கருத்தும், நிர்மலா சீதாராமன் கூறியதும் ஒரே கருத்துதான்’ என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று மாலை டெல்லி செல்கிறார் என்னும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு கோரும் அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் நாளை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீட் தேர்வு விலக்கு குறித்து நிர்மலா சீதாராமன் கூறியதை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பளித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க