முதல்வர், அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்..! மு.க.ஸ்டாலின் ஆவேசம்

நீட் தேர்வு விவகாரத்தில் துரோகம் இழைத்த முதல்வர், அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வு விவகாரம் குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை திணித்து மத்திய அரசு சமூக நீதியை சாகடித்துள்ளது. நீட் தேர்வு வழக்கு விசாரணையில் இருக்கும்போதே மத்திய அரசு நீட் தேர்வை திணித்துள்ளது. கூட்டாச்சி என்று பேசிக்கொண்டே உதட்டில் ஒன்று உள்ளத்தில் ஒன்று என்று வைத்து  மத்திய அரசு இரட்டை வேடம் போட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ கல்வி நிறுவனத்தை உச்சநீதிமன்றமே கடிந்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்ட்ட இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பப்படவில்லை. அந்த மசோதாக்கள் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர்கள், பா.ஜ.க அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் வெளியிட வேண்டும்.

நீட் தேர்வு விவகாரம் முடிந்துபோன ஒன்று என்று தம்பிதுரை கூறியது அதிர்ச்சியளிக்கிறது. அ.தி.மு.க எம்.பிக்கள் தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்யவேண்டும். தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்துவதாக கபட நாடகம் நடத்தி தமிழக மாணவர்களை ஏமாற்றியுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவருடைய பதவியை ராஜினாமா செய்ய அவராகவே முன்வர வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!