Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது? மூன்று மாதங்களில் 51 போலீஸார் உயிரிழப்பு !

 

                                        பணியில் போலீசார்

மிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் தவித்துக் கிடக்கின்றனர், கடைநிலை ஊழியர்களாக இருக்கும் போலீசார். பல்வேறு காரணங்களால் கடந்த மூன்றுமாதங்களில் மட்டும்  தமிழகத்தில் 51 போலீஸார் உயிரிழந்துள்ளனர். தற்கொலை முயற்சியில், போலீஸாரின் மனைவியர் மூவர் மற்றும் ஐந்து போலீஸார் சாக  முயன்று தப்பிப் பிழைத்துள்ளனர். தீராத நோயால் வந்த வேதனை, குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றோடு 'பணிச்சுமை' என்ற காரணமும் இந்த மரணங்களில் சிலவற்றுக்கு காரணமாக இருந்திருக்கிறது. காவலர் குறைதீர்ப்பு மையங்கள் ஒவ்வொரு காவல் மாவட்ட தலைமையகத்தில் இருந்தும் இந்தநிலை தொடர்கதையாகி வருகிறது.  

எந்தெந்த மாவட்ட போலீஸார்...
நேற்றுமுன் தினம் மட்டுமே மதுரை அண்ணாநகர்  சிறப்பு உதவி ஆய்வாளர் விவேகானந்தன், திருச்சி ஆயுதப்படை காவலர்  லியோ ஜோசப், செக்யூரிட்டி பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர் சாரங்கன் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு தலைமை காவலர் ஸ்ரீதேவி ஆகியோர் இறந்துள்ளனர். இதேநாளில் வேலூாரைச் சேர்ந்த தினகரனும் இறந்திருக்கிறார். திருப்பத்தூா் தாலுகா காவல்நிலையத்தில் பணியாற்றிய தினகரன், பணி ஓய்வுபெற்ற 12-வது நாளில் பரிதாபமாக உயிரை விட்டிருக்கிறார். மஞ்சள்காமாலை, மாரடைப்பு போன்றவைகளே இவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது.

இடமாற்றம் கிடையாது !
காவலர்கள் சிலர் நம்மிடம் பேசும்போது, "நாங்கள் 'காவலர் குறைதீர்ப்பு முகாம்' பக்கமே போவதில்லை. அங்கே போனால், இடம் மாற்றம் என்ற விஷயத்தைத் தவிர வேறு எதையும் அதிகாரிகளிடம் மனுவாகக் கொடுக்கலாம் என்று சொல்லி எங்களிடம் உறுதியை வாங்கிக் கொண்ட பின்னரே அதிகாரிகளைப் பார்க்க போலீஸார் அனுமதிக்கிறார்கள். அதிகாரிகளிடம் புகார் மனுவோடு போகும் பாதிபேரின் பிரச்னையே இடமாற்றம் குறித்துதான் இருக்கும். வேலூரில் குடும்பம் இருக்கிறது என்றால்,  திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் பக்கம் உத்தியோகம் போட்டால் கூட மோட்டார் சைக்கிளிலேயே  வாரத்தில் ஒருநாள் வீட்டுக்குப் போய்விட்டு வரலாம். ஆனால் நிலைமை அப்படியில்லையே.

விடுமுறையிலும் வில்லங்கம்

நெல்லை மாவட்டத்து காவலருக்கு சென்னையில் பணி. சென்னை காவலருக்கு தூத்துக்குடியில் பணி என்றுதான் போஸ்டிங் முறையே இருக்கிறது.  ஊருக்குப் போய்வர விடுமுறை அளித்தாலும், ரயிலைப் பிடிக்கும் கடைசி நிமிடத்தில்தான் அதிகாரிகள்,  'லீவ்-சாங்ஷன்' செய்கிறார்கள். ஊரிலிருந்து  டியூட்டிக்குத் திரும்பும்போதும் அதே நிலைதான்... முதல்நாள் இரவே 'நான் டியூட்டிக்கு வந்து விட்டேன்' என்று  தலைமையகத்தில் கையெழுத்துப் போடவேண்டும். அப்போதுதான் எங்களை மீண்டும் டியூட்டிக்கு எடுத்துக்கொள்வார்கள். " என்று குற்றச்சாட்டுகளாக அடுக்கினர். காவலர்களை, அதிகாரிகள் இப்படி விடாமல் விரட்டுவதற்குக் காரணம், போதிய எண்ணிக்கையில் காவலர்கள் பற்றாக்குறை  இருப்பதுதான் என்றும் சுட்டிக் காட்டுகின்றனர்.

20 ஆயிரம் போலீஸார் பற்றாக்குறை
தமிழக காவல்துறையில் காவல்துறையின் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) பதவியைத் தவிர்த்து, இன்னபிற டி.ஜி.பி. பதவிகள் முதல், கடைநிலை ஊழியரான  காவலர் வரையில் நிரப்பப்படாத பணியிடம் மட்டுமே 20 ஆயிரத்து சொச்சம் இருக்கிறது என்கிறது, அரசு நிலைத்தகவல். அதேபோல் கான்ஸ்டபிள், ஹெட்-கான்ஸ்டபிள், எழுத்தர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் (எஸ்.எஸ்.ஐ.)  வரை மட்டுமே 16 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கிறது. காக்கிகளின் அடுத்தடுத்த  திடீர் மரணங்கள் குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தருணம் இது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement