வெளியிடப்பட்ட நேரம்: 22:48 (13/08/2017)

கடைசி தொடர்பு:10:32 (14/08/2017)

'தமிழகத்தை விட்டு ஓ.என்.ஜி.சி வெளியேறவேண்டும்'..! - வைகோ ஆவேசம்

தமிழகத்தை விட்டு ஓ.என்.ஜி.சி வெளியேறவேண்டும். இல்லையென்றால் ஓ.என்.ஜி.சி குழாய்களை அடித்து நொறுக்குவோம் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

கதிராமங்கலம் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கும் வேலையில் அதன் அருகே உள்ள மாதிரிமங்கலத்தில் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. நான்காவது முறையாக ஓ.என்.ஜி.சி. குழாய் உடைந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேவுள்ள மாதிரிமங்கலத்தில் மக்கள் உச்சக்கட்ட அச்சத்தில் உள்ளனர்.  இங்கு இரண்டு கிணறுகளில் எடுக்கப்படும் எரிவாயு, குழாய் மூலம் சேத்திரபாலபுரம் கிராமத்திலுள்ள சேமிப்புக் கிடங்கிற்குக் கொண்டுச்செல்லப்படும். இந்நிலையில் இன்று (13-08-2017) எம்.ஜி.ஆர். நகரிலுள்ள குத்தாலம் வாய்க்காலில் பதிக்கப்பட்டிருந்த எரிவாயு கொண்டுசெல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் எரிவாயு வெளியேறி வருகிறது. இதைக்கண்ட கிராம மக்கள் பயந்து உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இங்கு இதுபோல் உடைப்பு ஏற்படுவது நான்காவது முறையாம். உடனடியாக வருவாய்த்துறை, காவல்துறை, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் விரைந்துவந்து உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.  இங்கு பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாய்கள் பழுதடைந்துள்ள நிலையில், அதை முழுமையாக மாற்றாமல் எங்கு உடைப்பு ஏற்படுகிறதோ அங்கே மட்டும் தற்காலிகமாய் சரிசெய்வதாலேயே மீண்டும், மீண்டும் இந்த விபத்து ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனடியாக சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டார்.  

அதன்பின் பேசுகையில், “டெல்டா மாவட்டங்களை முற்றிலுமாக அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தை அழிக்க நினைத்தால் இந்தியா எதற்கு? டெல்டா மாவட்டங்களை விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழிக்கும் முயற்சியிலிருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையேல் இளைஞர்களை ஒன்றுதிரட்டி ஓ.என்.ஜி.சி. குழாய்களை உடைத்தெரிவோம்” என்றார் ஆவேசமாக.  

அங்குவந்து பார்வையிட்ட விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இப்பகுதியில் பெட்ரோகெமிக்கல் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களை முற்றிலுமாக கைவிட்டு இந்த நிறுவனங்கள் வெளியேற வேண்டும். இப்பகுதியைப் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். இதை வலியுறுத்தி எதிர்வரும் 29ம் தேதி டெல்டா மற்றும் கடலூர் மாவட்டங்களில் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும். அதற்கு அனைத்துக் கட்சியினரும், விவசாயிகளும், பொதுமக்களும் ஆதரவு தரவேண்டும்” என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க