களைகட்டிய மாட்டுவண்டிப் பந்தயம்!

தேனி மாவட்டம் சின்னமன்னூர் அருகில் உள்ள மார்க்கையன்கோட்டையில் மாட்டிவண்டிப் பந்தயம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ வீரவிக்னேஷ்வர கணபதி குழு சார்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டிப் பந்தயத்தில், கம்பம், சின்னமன்னூர், கூடலூர் போன்ற 10-க்கும் மேற்பட்ட பகுதிகளிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்துகொண்டன. வெளிமாவட்ட மாடுகளும் இப்போட்டியில் கலந்துகொண்டன. இப்போட்டியானது மார்க்கையன் கோட்டையில் தொடங்கி உத்தமபாளையம் வரை நடைபெற்றது.

நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் ஆகிய ஆறு பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. ஆறு பிரிவுகளுக்குமே தனித்தனியாக பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டன. நடுமாடு பிரிவில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், கரிச்சான் மாடு பிரிவில் முதல் பரிசாக 8 ஆயிரம் ரூபாயும், பூஞ்சிட்டுப் பிரிவில் முதல் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும், தேன் சிட்டுப் பிரிவில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், தட்டான் சிட்டுப் பிரிவில் 2 ஆயிரத்து 500 ரூபாயும், புள்ளிமான் பிரிவில் 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டன. பந்தைய வகைகளைப் பொறுத்து பரிசுத்தொகை மாறுபட்டது. நான்காம் பரிசாக கேடயம் வழங்கப்பட்டது. பல ஊர்களில் இருந்து மாட்டுவண்டுப் பந்தய ஆர்வலர்கள் கலந்துகொண்டார்கள். மேலும், இப்பந்தயந்தை சுமார் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!