வெளியிடப்பட்ட நேரம்: 00:24 (14/08/2017)

கடைசி தொடர்பு:10:05 (14/08/2017)

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக விழிப்புஉணர்வு: சென்னை டூ நெடுவாசல் சைக்கிள் பயணம் செய்த இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 123 நாள்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் போராட்டத்தை கண்டுகொள்வதாக இல்லை. அதனால், மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் கவன ஈர்ப்பு நூதன போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

நெடுவாசல்

இந்நிலையில் 124 வது நாள் போராட்டமான நேற்று அருண் ஜெயச்சந்திரன் என்ற இளைஞர் ஒருவர் சென்னையிலிருந்து கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தன் சைக்கிள் பயணத்தை தொடங்கி, நேற்று நெடுவாசல் வந்து சேர்ந்துள்ளார். விவசாய குடும்ப பின்னணியைக் கொண்ட இவர் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். நெடுவாசல் போராட்டம்  பற்றிய விழிப்புஉணர்வு அனைத்துத் தரப்பு மக்களிடமும் ஏற்பட வேண்டும், முக்கியமாக இளைய தலைமுறையிடம் ஏற்பட வேண்டும் என்பதே இவருடைய சைக்கிள் பயணத்தின் நோக்கம் ஆகும். தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த இவர் விவசாயம் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக தன்னுடைய பங்கினை செலுத்த விரும்பி முந்நூற்று ஐம்பத்து மூன்று கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

நெடுவாசல்

இவருடைய சைக்கிள் பயணம் குறித்து அவரிடம் கேட்டபோது, "மத்திய, மாநில அரசுகள் நெடுவாசல் போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை என்பது எனக்கு வருத்தமில்லை. நான் சைக்கிள் பயணம் மேற்கொண்ட பொழுது, எதற்காக நான் இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டேன் என அனைத்துத் தரப்பு மக்களும் தங்களுக்குள் கேள்வி எழுப்பி காரணத்தைத் தெரிந்து கொள்ள முயல்வார்கள். அவ்வாறு தெரிந்து கொள்ள முற்படும் போது நெடுவாசல் போராட்டம் பற்றிய விழிப்புஉணர்வு ஏற்படும். எனது சைக்கிள் பயணத்தின் நோக்கம் அதுவே" என்று கூறினார்.

நெடுவாசல் மக்கள் பலதரப்பட்ட கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தி வரும் சூழ்நிலையில், இவருடைய சைக்கிள் பயணம் மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்குமா என்பதே கேள்வி.