வெளியிடப்பட்ட நேரம்: 03:40 (14/08/2017)

கடைசி தொடர்பு:16:30 (23/07/2018)

காவிரியில் மணல் அள்ளிய குழியில் மாட்டி இன்ஜினீயரிங் மாணவர்கள் உள்ளிட்ட மூவர் பலி?


                

 

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மூழ்கி இன்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர், முதியவர் உள்ளிட்ட மூவர் அடுத்தடுத்து பலியான சம்பவங்கள் மாவட்ட மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம்தான் கரூரைத் தொட்டது. இந்நிலையில், தொடர் விடுமுறை விடப்பட்டதால், பல கல்லூரி, பள்ளி மாணவர்கள் காவிரி ஆற்றின் புது நீரில் குளிக்க போட்டாபோட்டி போடுவார்கள். அந்த வகையில், கரூர் சின்ன ஆண்டான்கோவில் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மகனான பவித்திரத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வரும் ராம்குமாரும், வேலுச்சாமிபுரம் வடிவேல் என்பவரது மகனும், கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படிக்கும் முரளிதரனும் இன்னும் சில நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு, காவிரியில் நீண்ட காலத்துக்குப் பிறகு வரும் தண்ணீரில் குளிக்க ஆசைப்பட்டிருக்கிறார்கள். அதன் விளைவாக,நேற்று மதியம் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரியாற்றில் குளிக்கச் சென்றிருக்கிறார்கள்.

அங்கேதான், ராம்குமாரும், முரளிதரனும் ஓர் இடத்தில் குளிக்க, அவர்களோடு சென்ற அவர்களது நண்பர்களான தனுஷ், கண்ணதாசன், பிரதீப்ராஜ் ஆகியோர் வேறோர் இடத்தில் குளித்திருக்கிறார்கள். அப்போதுதான், நீருக்குள் மாட்டி ராம்குமாரும்,முரளிதரனும் இறந்திருக்கிறார்கள். இதேபோல், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாப்பேட்டையைச் சேர்ந்த அறுபது வயது முதியவரான சுப்ரமணி என்பவரும் அந்தப் பகுதி காவிரியில் குளித்தபோது, நீருக்குள் சிக்கி இறந்திருக்கிறார். இப்படி, கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று பேர் காவிரி நீரில் சிக்கி உயிரை விட்ட சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது..


 

"புது நீர், சுழல் எங்கே இருக்கும்ன்னு தெரியாம, மூவரும் சுழலில் மாட்டி இறந்துட்டாங்க" என்றார்கள் சிலர். ஆனால், வேறு சிலரோ, "மூவருக்கும் நன்றாக நீச்சல் தெரியும். அவர்களுக்கு பழக்கமான பகுதியில்தான் காவிரியில் குளித்திருக்கிறார்கள். அதனால்,அவர்களுக்கு எங்கே சுழல் வரும்ன்னு நல்லா தெரியும். அந்தப் பசங்களை விடுங்கள். வயதில் முதியவரான சுப்ரமணிக்கு காவிரியோட தன்மை தெரியும். சுழல் எங்கே வரும்ன்னும் தெரிஞ்சுருக்கும். அதோட, அவர் கரை ஓரமாதான் குளிச்சிருப்பார். சின்னப் பசங்க மாதிரி நீச்சல் அடிச்சு எட்டி போயிருக்க மாட்டார். இதை எல்லாம் வச்சுப் பார்க்கும் போது, இதுல கதையே வேற. நெரூர் பகுதியிலும், லாலாப்பேட்டை பகுதியிலும் இஷ்டத்துக்கு மணலை சுரண்டி, அதையும் தாண்டி களி மண் வரையும் அள்ளி அங்கங்கே இருபது அடி வரைக்கும் குழிகளை மூடாம விட்டிருந்தாங்க மணலை அள்ளியவர்கள். மூவரும் அந்தமாதிரி குழிக்குள் மாட்டிக்கிட்டுதான் இறந்து போயிருக்காங்க. அதனால், இந்த மூன்று சாவுகளுக்கும் மணல் அள்ளுபவர்களும், குவாரி மூலம் முறைகேடாக மணல் அள்ளிய ஆளுங்கட்சி புள்ளிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். அதோடு, இனி காவிரியில் மணல் அள்ளவும் தடை போடணும். குவாரிகளையும் இழுத்து மூடனும்" என்று சோகத்திலும் வெடிக்கிறார்கள் பலியான மூன்று பேரின் உறவினர்கள் சிலர்.