'கொங்கு மண் தி.மு.க.வை ஏமாற்றியது': எ.வ.வேலு ஆவேசம்!

குமரிமாவட்ட தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா ஆரல்வாய்மொழியில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளருமான எ.வ.வேலு கலந்து கொண்டார். அவர் பேசும் போது, 'நமக்கு நாமே என ஸ்டாலின் இந்தக் கன்னியாகுமரியில் இருந்துதான் தொடங்கி ஒவ்வொரு மாவட்டமாக நடந்து மக்களைச் சந்தித்தார். பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செயல்படுத்த முடியாத மத்திய அரசு திட்டங்களுக்குப் போகிற, வருகிற இடங்களில் பேட்டிக் கொடுக்கிறார். காலையில் ஒரு பேட்டி, மாலையில் ஒரு பேட்டி.அவரால் எந்த வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வர முடியவில்லை. திருவண்ணாமலையில் சாலை சீரமைக்க  மனு கொடுத்தேன். அது இன்னும் நடக்கவில்லை. அவர் துறையில் அவரால் எதும் செய்ய முடியவில்லை. தேர்தல் வரலாற்றிலே நின்ற அனைத்துத் தேர்தலிலும் வெற்றி பெற்று உலக வரலாற்றில் இடம் பிடித்தவர் கலைஞர் மட்டும்தான். அதனால்தான் வைர விழா இப்போது கொண்டாடப்படுகிறது.

கலைஞர்தான் தமிழகத்தில் சிறந்த பேச்சாளர். 60 ஆண்டுகளில் பலதுறை அமைச்சராக ,முதல்வராக அவர் பேசி இருக்கும் பேச்சில் ஒரு வரி கூட, சட்டமன்றத்தில் நீக்கப்படவில்லை. தளபதி சட்டமன்றத்தில் மக்கள் பிரச்னையை பேசுகிறார். சிறு, குறு விவசாயி எனப் பிரிக்கக் கூடாது என சொல்கிறார். கடன்களை ரத்து செய்ய சொல்கிறார். தர்மாகோல் விஞ்ஞானி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு இது பற்றி எதுவும் தெரியவில்லை. ஜி.எஸ்.டி.வரியை கலைஞர் எதிர்த்தார். ஜெயலலிதாவும் எதிர்த்தார். ஆனால் அம்மா ஆட்சி என்று சொல்பவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்து உள்ளார்கள். ரேஷனில் பொருள்கள் இல்லை. இனி ரேஷன் கடையே இல்லை. 

நீட் தேர்வு, தமிழகத்தில் மோசமான நிலையை உருவாக்கும். மாநில உரிமை பறிக்கப்படும். சமச்சீர் கல்வி படித்த மாணவர்களின் கல்வி இன்று செல்லாமல் போய்விட்டது. நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள் டாக்டர் ஆக முடியாது. இந்தியாவில் மொத்தம் 563 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதில் 170 கல்லூரிகள் தமிழத்தில் உள்ளன. இப்போது பீஹார், உத்தரப்பிரதேசக்காரர்கள் வந்து படிக்கப் போகிறார்கள். நம் வரிப்பணத்தில் கட்டிய கல்லூரிகளில் அவர்கள் படிக்க எப்படி இடம் கொடுக்க முடியும்..

பெரிய ஆபத்து நீட் தேர்வு மூலம் வந்திருக்கிறது. டெல்லியில் எய்ம்ஸ், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மாணவர்களுக்கு  நீட் தேர்வில் சலுகை கொடுத்து சுயநலத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தில் எதிலும் ஊழல். எப்போது ரெய்டு வரும் என அவர்களுக்கு பயம். மோடியை அடிக்கடி பார்க்கிறார்கள்.அது தங்கள் பதவியைக் காப்பாற்ற தானே தவிர தமிழகப் பிரச்னை பேசுவதே இல்லை. ஒரு சதவிகித வாக்கால் நல்ல ஆட்சியை மக்கள் பெறமுடியாமல் போய் விட்டார்கள். கொங்கு மண் எங்களை ஏமாற்றி விட்டது. அதனால் தி.மு.க ஆட்சியை இழந்தது. தியாகத்தின் மொத்த தி.மு.க. தற்போது தமிழகம் காலியாக இருக்கிறது. அதற்கு விடிவு காலம் தேவை என்றால் திமுக ஆட்சி மலர வேண்டும். ஆட்சி மாற்றம் உடனே தமிழகத்துக்கு தேவை" என்று பேசினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!