வெளியிடப்பட்ட நேரம்: 04:59 (14/08/2017)

கடைசி தொடர்பு:16:23 (23/07/2018)

"பொதுமக்கள் எந்நேரமும் மனுக்கள் தரலாம் உடனே பரிசீலிக்கப்படும்!" - அமைச்சர் விஜயபாஸ்கர்


                    

 

"பொதுமக்கள் எந்நேரம் வேண்டுமானாலும் கோரிக்கை மனுக்கள் தரலாம். அவர்களின் மனுக்கள் உடனே பரிசீலிக்கப்படும்" என்று தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாங்கல், மண்மங்கலம், ஆத்தூர் பூலாம்பாளையம் போன்ற பகுதிகளில் தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். பின், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற விஜயபாஸ்கர் உத்தரவிட்டார்.
 

அப்போது அவர் பேசியதாவது, "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி, ஊராட்சி வாரியாக பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காக வாரத்தில் திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வாரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம், மாதத்தில் ஒருநாள் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் 153 பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியும், ரூ 2400 கோடி கல்விக்காக நிதி ஒதுக்கி மாணவ, மாணவிகளுக்கு கணினி முதல் காலணி வரை கல்வி உதவித் தொகை, இலவசப் பேருந்து பயண அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும், விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின் விசிறிகளை 100 சதவிகிதம் வழங்கியதுடன், ஏழை பெண்களின் திருமணத்திற்காக 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கியதை தேர்தல் வாக்குறுதியில் 8 கிராம் வழங்கப்படும் என்பதையும் நிறைவேற்றி வருகிறோம். ஏழை பெண்களின் பொருளாதாரத்தை பெருக்குவதற்காக விலையில்லா ஆடுகளை வழங்கி வருகிறோம். அவ்வாறு வழங்கி வரும் திட்டங்களில் மற்ற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் முத்துலெட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டம் எனப் பல்வேறு திட்டங்கள் வழங்கி வருவது மட்டுமன்றி, தற்போது ஏழை தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை நன்றாக பராமரித்திட அம்மா குழந்தைநல பரிசுப்பெட்டகம் வழங்கப்பட்டு வருகிறது. அதனால்,மக்கள் எந்நேரமும் கோரிக்கை மனுக்களை தரலாம். அவர்களின் மனுக்கள் உடனே பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.