வெளியிடப்பட்ட நேரம்: 09:47 (14/08/2017)

கடைசி தொடர்பு:16:17 (13/07/2018)

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு!

நாகை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினர் இன்று கைதுசெய்துள்ளனர்.


வங்கக் கடலின் பாக் நீரினைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைதுசெய்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நாகை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 49 மீனவர்களை ஒரே நாளில் இலங்கைக் கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர். மீண்டும் 10-ம் தேதி காலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 3 விசைப்படகுகளையும் அதில் மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்களையும் சிறைப்பிடித்துச் சென்றனர். மேலும், கார்த்திக் என்பவரது படகினை தங்கள் கப்பலைக் கொண்டு மோதி சேதப்படுத்தினர்.

மீனவர்கள் படகுகள்


இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகளின் எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளன. இதனால் மீன் பிடி தொழிலையே நம்பியுள்ள மீன்பிடி கூலித் தொழிலாளிகள் வேலை இழந்து வருமானம் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில், நாகை மாவட்டம் ஆற்காடு துறையிலிருந்து நேற்று நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற கபிலன், ராமசாமி, தேவதாஸ் உள்ளிட்ட 4 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இன்று அதிகாலை சிறைப்பிடித்துச் சென்றுள்ளனர். இலங்கை பருத்தித்துறை பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட இவர்களை காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே 79 மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4 மீனவர்கள் சிறைப்பிடித்து செல்லப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.