வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (14/08/2017)

கடைசி தொடர்பு:15:35 (14/08/2017)

ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம்,  தெற்கு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில்  தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 மகாரெஜிமென்ட் ராணுவ வீரர், சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம், கண்டனி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் இளையராஜா 12.8.2017 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து  நான் மிகுந்த துயரமும், மன வேதனையும்  அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ராணுவ வீரர் இளையராஜா குடும்பத்துக்கு 20  லட்சம் ரூபாய்  உடனடியாக  வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.