வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (14/08/2017)

கடைசி தொடர்பு:13:03 (14/08/2017)

நம்பும்படியாக உள்ளதா? விஜயபாஸ்கருக்கு, ராமதாஸ் கேள்வி

ramadoss- Vijayabaskar

டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 14 பேர் இறந்து விட்டனர் என்பது நம்பும்படியாக உள்ளதா என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர்தான் கூற வேண்டும் என்று கூறியுள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், டெங்கு உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து நோயைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசு நிர்வாகத்தில் ஆதி முதல் அந்தம் வரை அனைத்திலும் மோசடிதான் என்பதற்கு டெங்கு  உயிரிழப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள்தான் எடுத்துக்காட்டாகும். தமிழக அரசால் வழங்கப்பட்டு மத்திய அரசால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில், தமிழ்நாட்டில் 06.08.2017 வரை டெங்கு காய்ச்சலால் 5968 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் மட்டும்தான் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்கள் பொய்யானவை என்பதை முதல் பார்வையிலேயே கண்டுபிடித்து விட முடியும். தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாகவே டெங்கு காய்ச்சலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகக் குழந்தைகள், முதியோர், கருவுற்ற பெண்கள் ஆகியோர்தான் டெங்கு காய்ச்சலால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக வைத்துக் கொண்டால் கூட தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவை கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்கள்தான். இவற்றில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக பெங்களூருக்கும், கோவை மாவட்டத்தின் எல்லையோரங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் சிகிச்சைக்காக கேரளாவுக்கும் சென்று விடுவதால் அந்தக் கணக்கு தமிழகத்தில் சேர்க்கப்படுவதில்லை. இவற்றைச் சேர்க்காமல் தான் தமிழகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவது குறித்து கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி பாமக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் 7 பேரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் கோவை மாவட்டத்தில் மட்டும் 30 பேரும், கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாள்களில் 5 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவை ஊடக செய்திகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் ஆகும். டெங்கு காய்ச்சலின் தாக்கம் இதைவிட அதிகமாக இருக்குமே தவிர குறையாது. இதையெல்லாம் மறைத்து விட்டு டெங்கு காய்ச்சலால் ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு தெரிவித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதாரச் சேவைகள் தலைமை இயக்குநரக இணையதளத்தில்தான் இந்தப் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 20.06.2017 அன்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் தமிழகத்தில் 3259 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்பின்னர் 75 நாள்களுக்கும் மேலாகியும் டெங்குவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று தமிழக அரசு தெரிவித்திருப்பது உண்மை கலக்காத பொய் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. டெங்கு உயிரிழப்புகள் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள  புள்ளிவிவரங்களுக்கும், மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவல்களுக்குமிடையே ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. கடந்த 11-ம் தேதி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார். அடுத்த நாள் 12-ம் தேதி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவுக்கு 15 பேர் இறந்திருப்பதாகக் கூறினார். அப்படியானால் கடந்த 6 நாள்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்திருப்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் கூறுகிறார். டெங்கு உச்சத்தில் இருந்த காலத்தில் ஒருவரும் இறக்கவில்லை... டெங்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 14 பேர் இறந்து விட்டனர் என்பது நம்பும்படியாக உள்ளதா என்பதை அமைச்சர்தான் கூற வேண்டும்.

உண்மை என்னவென்றால் கடந்த 2010-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் ஆண்டு தோறும் பரவி மோசமான விளைவுகளை  ஏற்படுத்தி வருகிறது. ஆனால், அதைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது என்பதுதான் உண்மை. அதை மறைப்பதற்காகவே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இல்லவே இல்லை என்றும், டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும் உண்மைக்கு மாறான தகவல்களை தமிழக அரசு திட்டமிட்டு பரப்பி வருகிறது. டெங்கு உயிரிழப்பை குறைத்துக் கூறுவதால் பயன் இல்லை. உண்மையில் டெங்குவின் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்ற உண்மையை ஒப்புக்கொண்டால்தான் அதற்கான சிகிச்சை அளிக்க முடியும். டெங்கு தாக்கத்தை குறைத்து கூறுவதால் தமிழக அரசு அதையே ஏமாற்றிக் கொள்கிறது. இதனால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். எனவே, டெங்கு உயிரிழப்புகளைக் குறைத்துக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விடுத்து நோயைக் கட்டுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.