வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (14/08/2017)

கடைசி தொடர்பு:13:47 (14/08/2017)

நீட் தேர்வில் விலக்கு..! மத்திய அரசிடம் கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிப்பு

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கூடுதல் ஆவணங்களை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சமர்ப்பித்துள்ளார்.


தமிழக அரசு உரிய அவசரச் சட்டவரைவை அளித்தால் ஒரு வருடத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கலாம் என்று நேற்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்த நிலையில், நீட் தேர்வில் விலக்கு பெறுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க சுகாதாரத்துறை செயலாளர் டெல்லி சென்றார். டெல்லி சென்ற அவர், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையிலான அவசர சட்டவரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளித்துள்ளார். இந்த சந்திப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், 'நீட் தேர்விலிருந்து தமிழகத்து விலக்கு அளிக்கும் சட்டவரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. அதை ஆய்வுசெய்த உள்துறை, கூடுதலான ஆவணங்களைக் கேட்டுள்ளது' என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிறிது நேரத்தில் கூடுதலான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு மீண்டும் உள்துறை அமைச்சகத்திடம் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ளார்.