வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (14/08/2017)

கடைசி தொடர்பு:16:30 (14/08/2017)

விஜய் படவிழாவில் ரஜினி, கமல் பங்கேற்கவில்லை - மெர்சல் படத் தயாரிப்பாளர் தகவல்

அட்லியின் இயக்கத்தில் 'தெறி' திரைப்படம் வெளிவந்தது.  விஜய்க்கும், அட்லிக்கும் கெமிஸ்டரி ஜாகரபி, பயோலாஜி என்று அனைத்து அம்சங்களும் பொருந்திப் போனது. அப்போதே  அட்லி சொன்ன மூன்று வேடம் கொண்ட ஒரு வித்தியாசமான கதை விஜய்க்கு ரொம்பவும் பிடித்துப் போனது. அதன்பின் தன்னிடம் கால்ஷீட் வாங்கி வைத்து இருந்த தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி ராமசாமியிடம் அட்லியை அனுப்பி வைத்தார் விஜய்.

மெர்சல்

முதலில் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டனர்.  அதன்பின் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கே இருக்கும் லொகேஷன்களை செலக்ட் செய்தனர்.  விஜய் படத்துக்கு டைட்டிலே வைக்காமல் ஐம்பது சதவிகித படப்பிடிப்புகளை முடித்த பின்னர் 'மெர்சல்' என்று பெயர் சூட்டினர்.  ஏற்கெனவே வெளிவந்த 'பைரவா' திரைப்படக் கதை  திருநெல்வேலி பின்னணியில் அமைந்திருந்தது. அதற்கென்று திருநெல்வேலி போலவே ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்திருந்தனர். இப்போது 'மெர்சல்' திரைப்படம் மதுரை பின்புலத்தில் அமைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

மூன்று விஜய்யில் ஜல்லிக்கட்டு விளையாட்டு வீரராக ஒரு விஜய் நடித்திருப்பதாக சொல்கிறார்கள். சென்னையில் உள்ள ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் மதுரை பின்னணியைக் கொண்ட பிரமாண்ட செட் அமைத்திருக்கின்றனர். விஜய்யுடன் நடிப்பதற்காக மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். குறிப்பாக, முறுக்கு மீசை கொண்ட 1000 நபர்களை சென்னைக்கு வரவழைத்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் இயக்குநர் அட்லி.  ஆகஸ்ட் 20-ம் தேதி அன்று நேரு ஸ்டேடியத்தில் 'மெர்சல்' திரைப்படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்குத் திட்டமிட்டுவருகின்றனர். விஜய்யின் 'மெர்சல்' படத்தின் ஆடியோ விழாவில் ரஜினி கலந்துகொண்டு அந்தப் படத்தின் ஆடியோவை வெளியிடுவதாகவும், கமல் பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் ஒரு செய்தியை பிக் பாஸ் ஃபீவர் ரேஞ்சுக்கு ஆளாளுக்குப் பரப்பி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில்  'விஜய் படவிழாவில் ரஜினி, கமல் கலந்துகொள்கிறார்களா?' என்கிற கேள்வியை 'மெர்சல்' பட தயாரிப்பாளர்  முரளி ராமசாமியிடம் கேட்டோம். ' ரஜினி, கமல் கலந்துகொள்வதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை' என்று நம்மிடம் மறுத்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க