வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (15/08/2017)

கடைசி தொடர்பு:17:23 (15/08/2017)

`நீட்' ஓராண்டு விலக்கு... பெற்றோர்கள் புலம்பல்... சாதக, பாதகங்கள் என்ன? #NEET

`நீட்' ஓராண்டு விலக்கு பெறுவதன் மூலம், இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பயன்பெற இருக்கிறார்கள். இதன்மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,594 இடங்களிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு 783 இடங்களிலும், பல் மருத்துவ கல்லூரிகளில் 1,190 இடங்களிலும் மாணவர்கள் சேர இருக்கின்றனர். 

நீட் மருத்துவ கலந்தாய்வு

இந்த நிலையில், நீட் தேர்வுக்காகப் படித்து, +2 மதிப்பெண் குறைவாகப் பெற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒருவேளை இவர்களுக்குத் தனியார் மருத்துவக் கல்லூரியில் நீட் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தாலும், கல்விக் கட்டணம் அதிகம் என்பதால், சேர முடியாத நிலை. 

ப்ளஸ் டூ தேர்வில் உயர் மதிப்பெண் பெற்றவர்கள் தற்போது பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பி.இ., / பி.டெக்., படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்தால், பொறியியல் இடங்கள் காலி இடங்களாக மாறும். இதன்மூலம் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் முதன்மையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 25 சதவிகித இடங்கள் காலியாக வாய்ப்புள்ளது. இதைப்போலவே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்த மாணவர்களும் மருத்துவக் கல்விக்காக இடம்பெயர்வார்கள். இங்கும் காலி இடங்கள் உருவாகும். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகமும் இரண்டாவது கலந்தாய்வை நடத்தாமல் நிறுத்திவைத்திருப்பதால், அங்கு காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர ஓரளவு வாய்ப்பு கிடைக்கும். ஆனால், பொறியியல் கல்லூரிகளில் ஏற்படும் காலி இடங்கள், நிரப்பப்படாமலேயே இருக்கும். 

நீட் மருத்துவ கலந்தாய்வு

அண்ணா பல்கலைக்கழகத்தில் 198 வரை கட் ஆஃப்  மதிப்பெண் பெற்றவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும்போது, கிண்டி பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன், மெக்கானிக்கல் துறைகளில் காலி இடங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. `இதுபோன்ற பிரச்னைகளைச் சமாளிக்க, அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் கலந்தாய்வுக்குச் செல்ல இருக்கிறோம்' என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தாலும், இந்த ஆண்டு ஏற்படும் காலி இடங்களை நிரப்ப வழியில்லாமல் தவிக்கிறது.

கிண்டி பொறியியல் கல்லூரியில் மட்டுமல்லாது, குரோம்பேட்டையில் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லூரி, எஸ்.எஸ்.என் இன்ஜினீயரிங் கல்லூரி, பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி, கோவையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்திருக்கிறார்கள். இந்தக் கல்லூரிகளிலிருந்து 1,500 முதல் 2,500 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரத் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இதைப் போலவே, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலும், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்துள்ள மாணவர்கள், மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே, கலந்தாய்வில் தேர்ந்தெடுத்த கல்லூரியில் படிக்கலாமா அல்லது மருத்துவக் கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாமா என்ற குழப்பமும் மாணவர்களிடையே காணப்படுகிறது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் ``என் மகன் கடந்த ஆண்டு ப்ளஸ் 2-வில் 1,117 மதிப்பெண் பெற்றிருந்தான். நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என நினைத்து,  நீட் தேர்வுக்காக ஓராண்டு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுதினான். தற்போது நீட் தேர்வுக்கு திடீரென விலக்கு பெற்றிருப்பதால், என் மகன் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை உருவாகி இருக்கிறது. அதிக கட்டணம் செலுத்தி, நிகர்நிலை மருத்துவக் கல்லூரியில் சேர முடியாத நிலையில் இருக்கிறோம். என்னைப்போல ஏராளமான பெற்றோர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாதிக்காமல் இருக்க முடியும்" என்கிறார். 

இதேபோல, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, கட் ஆஃப் குறைவாகப் பெற்றுள்ள பல மாணவர்கள் இந்த நீட் தேர்வு விலக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசும் மாநில அரசுகள் என்ன விளக்கம் சொல்லப் போகிறது? 


டிரெண்டிங் @ விகடன்