வெளியிடப்பட்ட நேரம்: 06:55 (15/08/2017)

கடைசி தொடர்பு:06:55 (15/08/2017)

'கணவரை கோமாவிலிருந்து மீட்டதோடு, அத்தனை சொத்தையும் மீட்டிருக்கிறேன்' - தன்னம்பிக்கைப் பெண் தமிழ்ச்செல்வி!

தமிழ்ச்செல்வி

''சென்னை, மயிலாப்பூரில் இருந்து எனக்கு ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஆர்டர் வந்துச்சு. என்னை நம்பி அவ்வளவு பெரிய ஆர்டர் வந்ததை என்னால இப்பவும் மறக்க முடியல. 2014ம் வருஷம் தான் அந்த ஸ்வீட் அதிர்ச்சிகரமான நாள். அந்த ஆர்டருக்கான நேரம் ஒன்றரை மாசம். ஆனா நான் ஒரே மாசத்துல முடிச்சுக் கொடுத்தேன். அவங்ககிட்டே இருந்து ஆர்டர் வந்துட்டே இருக்கு’' எனப் புன்னகையோடு பேச ஆரம்பித்தார் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.

'' 2013 ம் ஆண்டின் இறுதியில் என் கணவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். வீடு, கார், டிராவல்ஸ்னு எங்களோட அத்தனை சொத்தையும் இழந்துட்டோம். ஒரே நாள்ல வீதிக்கு வந்ததை அவரால தாங்க முடியாம கோமாவுக்குப் போயிட்டார். அப்போ கையில் நயா பைசா கிடையாது. கண்ணு முன்னாடி கணவர் நினைவில்லாம இருக்கிறதைப் பார்த்த எனக்கு இதுக்கு மேல என்ன வாழ்க்கை இருக்கு... இனி அவ்ளோதான்னு நினைச்சேன். ஆனா கலங்கி நின்ன எனக்கு கைக்கொடுத்தது ஜூட் பேக்.

என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தங்க ஜூட் பேக் செய்துட்டு இருந்தாங்க. 'ஜிப்’ போன என்னோட ஒரு பையை சரிபண்ணிக் கொடுக்கச் சொல்லி போனப்போ, 'ஒண்ணுமே பண்ண முடியாது'னு சொல்லிட்டாங்க. நானே முயற்சி செய்து சரிபண்ணினப்போதான், நாமும் ஜூட் பேக் தொழில் செய்யலாமேனு யோசனை வந்தது. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தத் தொழில். இதில் பெண்கள் நிலைத்திருக்க முடியாதுனு சொல்லுவாங்க. காரணம், தொடர்ந்து ஜூட் பேக் பின்னும்போது கைவலியும் பின்னி எடுக்கும். கூடவே, டஸ்ட் அலர்ஜி ஏற்படும். ஆனா, நான் ஏழு வருஷமா இதுல நிலைச்சிருக்கேன். இன்னிக்கு பியூட்டீஷியன், ஃபேஷன் ஜுவல்லரி மேக்கர், கிராஃப்ட் மேக்கர், டெயிலர்னு பலதரப்பட்ட தொழில்கள்ல நான் இயங்கிட்டு இருந்தாலும், எனக்குக் கைகொடுத்து தூக்கிவிட்டது, இந்த ஜூட் பேக்தான்.

தமிழ்ச்செல்வி

எங்கிட்ட இப்போ 10 பேருக்கு மேல் வேலை பார்க்கறாங்க. இதுவரை  40 சுயஉதவிக் குழுக்களுக்கு 'ஜூட் பேக்’ பயிற்சி கொடுக்கிற வாய்ப்பும் எனக்குக் கிடைச்சது. தொடர்ந்து பல பெண்களுக்கும் ஜூட் பேக் எப்படி தயாரிக்கிறதுனு வகுப்பு எடுக்கறதோட, வேலைவாய்ப்பையும் கொடுத்துட்டு இருக்கேன்'' என்கிறார் தமிழ்ச்செல்வி.

''தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டா போதுமா, என் உயிராக இருக்கும் கணவர் நல்ல நிலையில் இருந்தால்தானே.. என் வாழ்க்கை நிறைவுபெறும்... கோமா நிலையிலிருந்த என் கணவர்கிட்ட அடிக்கடி, 'நமக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, ரெண்டு குழந்தைகள் இருக்காங்க, காலேஜ் போயிட்டு இருக்காங்க’னு சொல்லி எங்க கல்யாண ஆல்பம், குழந்தைகளோட போட்டோக்களை எல்லாம் காட்டிட்டே இருப்பேன். நான் இப்படிச் செய்றதை பார்க்கிற சொந்தக்காரங்க, என்னை ஏளனமா பார்த்திருக்காங்க.  நான் அதைப் பத்தியெல்லாம் கவலைப்பட்டதில்ல. என் நம்பிக்கைக்கு கிடைச்ச பலன் அவர் கோமாவுலிருந்து மீண்டு வந்தார். அவர் மீண்டு வந்த தருணத்தை இப்பக்கூட என்னால சரியா விவரிக்க முடியல.  இன்னிக்கு தனியா ஒரு கடையைப் பார்த்துக்கிற அளவுக்கு உடல் நிலையில் முன்னேறியிருக்கார்.

இப்போ ஜூட்ல செப்பல்களையும் செய்யக் கத்துட்டு இருக்கேன். அதுக்கான ஃபினிஷிங் இப்போ சரியா வந்துட்டதால, அதிலும் நான் சுறுசுறுப்பா இயங்கிட்டு இருக்கேன். ஜூட் பேக் தொழிலைப் பொறுத்தவரை 15 நாட்களுக்கு ஒரு முறை 1,000 பேக்குக்கும் மேல ஆர்டர் வரும். மாசம் 60,000 லாபம் நிக்கும். பல தடைகளையும் பல்லைக் கடிச்சுட்டு தாண்டி வந்ததாலதான், இன்னிக்கு இந்த லாபம் எனக்கு கிட்டியிருக்கு'' என்று பூரிப்போடு முடிக்கிறார் தன்னம்பிக்கைப் பெண் தமிழ்ச்செல்வி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்