"இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்" - ராணுவ வீரரின் மனைவி

சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே கண்டணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. ராணுவ வீரரான இவர் ஜம்மு-காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணமடைந்தார். அவரது உடல் சொந்த ஊரான கண்டணியில் அரசு மரியாதையுடன் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கண்டணி கிராமம் முழுவதும் சோகமயமாகக் காணப்படுகிறது. தந்தை பெரியசாமி  கூலித் தொழிலாளி. இவர் வெளியூரில் வேலைக்குப் போனால் ஒரு மாதம் கழித்தே ஊர் திரும்புவார். மகன் இறந்த தகவல் இவருக்குத் தெரியாது. எந்த ஊருக்கு வேலைக்குச் சென்றார் என்கிற தகவல் இல்லாததால், குடும்பத்தினரும் ஊர் மக்களும் குழப்பத்தோடும் சோகத்தோடும் காணப்படுகிறார்கள். பெரியசாமி நான்கு மொழி தெரிந்தவர். கூலித் தொழிலாளர்கள் குடும்பத்தில் பிறந்தவர் இளையராஜா. கூரை வீட்டில் வாழ்ந்த குடும்பம். இளையராஜா வேலைக்குப் போன பிறகுதான் ஓட்டு வீடு கட்டியிருக்கிறார்கள். வறுமையின் பிடியில் இருந்த குடும்பம் மீண்டும் வறுமைக்கே திரும்பியிருக்கிறது.

இன்று கோகுலாஷ்டமி திருவிழாவுக்கு தயாரான நிலையில் அந்தக் கிராமம் இருந்தது. ஒவ்வொர் ஆண்டும் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. ராணுவத்துக்கு சேருவதற்கு முன்பு வரை இதற்கான தலைமை இளையராஜாதான். இந்தத் திருவிழாவுக்குக்கூட பணம் அனுப்பியிருக்கிறார். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே போலீஸ், ராணுவம் போன்றவற்றில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ilaiyaraja fatherஅவரது கனவாக இருந்தது. அந்தக் கனவு பத்தாம் வகுப்பு படித்து முடித்ததும் நிறைவேறியது. ராணுவத்தில் சேர்ந்து நான்கு வருடங்கள்தான் ஆகின்றது. திருமணம் முடிந்து ஒரு வருடம் முடிந்திருக்கிறது. மனைவி செல்வி தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கை ஒடிந்து ஊருக்கு வந்தார். கையில் ப்ளேட் வைத்து ஆபரேஷன் செய்து அனுப்பி வைத்தோம். சனிக்கிழமை காலையில்கூட எங்களிடம் பேசி நான் இந்த வருஷம் கோகுலாஷ்டமி திருவிழாவுக்கு வர முடியாது. இங்கே சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஊரில் திருவிழாவை பிரமாண்டமாக நடத்துங்கள் என்று காலையில் பேசினார் இளையராஜா. அன்றைக்கு இரவே குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்த்தவர் இறந்துவிட்டார் என்று தகவல் மட்டும்தான் அங்கிருந்து வந்தது. சுதந்திர தினத்தைச் சீர்குலைக்கும் விதமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது என்கிறார்கள் அவரது நண்பர்கள்.

இறந்துபோன இளையராஜாவின் மனைவி செல்வி எம்.பி.ஏ எம்ஃபில் முடித்திருக்கிறார். "என் கணவர்  நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்துள்ளார். கடந்த மாதம் ஊருக்கு வந்து விட்டு போகும்போது அடுத்த மாதம் அவர் இருக்கும் இடத்துக்கு அழைத்து போவதாகச் சொன்னார். இப்படி என்னைத் துடிக்கவிட்டு சென்றுவிட்டாரே. இதுக்காகவா நான் காதலித்து திருமணம் செய்தேன்" என்று கதறி அழுதார் செல்வி.

 

 

 இந்த ஊரில் மட்டும் ஐந்து பேர் ராணுவத்தில் பணியாற்றுகிறார்கள். அதில் வெங்கடேசன் என்பவர், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பனிச்சரிவில் இறந்திருக்கிறார். ராணுவ வீரரான இளையராஜா உடல் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு மரியாதை செய்யப்பட்டது. அதன் பின்னர், ராணுவ வாகனத்தில் உடல் ஏற்றப்பட்டு சொந்த ஊரான கண்டணிக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு, சிவகங்கை மாவட்ட கலெக்டர், எஸ்.பி, அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 30 ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இளையராஜா குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!