வெளியிடப்பட்ட நேரம்: 17:35 (14/08/2017)

கடைசி தொடர்பு:17:50 (14/08/2017)

’ஓ.பன்னீர்செல்வம் கிரீன் சிக்னல்’: ஜெயக்குமார் நம்பிக்கை

'அ.தி.மு.க அணிகள் விரைவில் இணையும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த நிதியமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஜெயக்குமார்


அ.தி.மு.க. அணிகள் இணைப்புப் பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக்  கருதப்படும் சூழலில், டெல்லியில் பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தின் இன்றைய அரசியல் சூழல்குறித்து பிரதமர் மோடியிடம் விரிவாக எடுத்துரைத்ததாகத் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின்னர் பேசிய ஓ.பன்னீர்செல்வம் பேசியது அணிகள் இணைப்புக்கான கிரீன் சிக்னலாகவே நாங்கள் பார்க்கிறோம். அணிகள் இணைப்பு முழுவடிவம் பெற்றுள்ளது. நல்லது நடக்க யார் வேண்டுமானாலும் முயற்சி எடுக்கலாம். அ.தி.மு.க அணிகள் ஒன்றுபடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தினகரனுக்கு எதிரான தீர்மானத்தை அனைவரும் படித்துப்பார்த்தே கையெழுத்திட்டனர். இந்த விவகாரத்தில் துரை.கோவிந்தராஜன் மாற்றிப்பேசுவதால், அவர் மிரட்டப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆட்சி நீடிக்க வேண்டுமா... வேண்டாமா? என்பதை மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.  'நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவேன்' என்று ஸ்டாலின் கூறியதை டி.டி.வி. தினகரன் எதிர்த்திருக்க வேண்டும். மதுரையில் பொதுக்கூட்டத்தைக் கூட்டியுள்ளது, தினகரனின் காழ்ப்பு உணர்ச்சியைக் காட்டுகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தினகரன் நிதானத்தை இழந்துவிடக்கூடாது. ஜெயலலிதா இருந்த இடத்தில் யாரையும் வைத்து அழகுபார்க்க நாங்கள் விரும்பவில்லை. 2011-ல் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட தினகரன், எப்படி கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆக முடியும் என்று கேள்வி எழுப்பினார்.