வெளியிடப்பட்ட நேரம்: 19:31 (14/08/2017)

கடைசி தொடர்பு:13:18 (10/07/2018)

அரசு வழங்கும் விலையில்லா ஆடுகள் பெற தகுதிகள் என்னென்ன..?

 

கரூர் மாவட்டத்தில் நாளை பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற இருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், விலையில்லா ஆடுகள் வழங்க பயனாளிகள் தேர்வுசெய்யப்பட இருப்பதாக, கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
 இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
 "தமிழக முதலமைச்சர் அவர்களால் 15.09.2011 அன்று தொடங்கப்பட்ட விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில், தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுவருகின்றன. கரூர் மாவட்டத்தில், 2017-18 ம் நிதியாண்டில் விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ள 32 கிராமங்களில், முதல்கட்டமாக 14 கிராமங்களுக்கு 883 பயனாளிகள் கிராமசபை மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளது. விலையில்லா ஆடுகள் வழங்க அமைக்கப்பட்டுள்ள குழு உறுப்பினர்களைக்கொண்டு கிராமசபைக் கூட்டம்மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 15.08.2017 அன்று முதல் கிராமங்களில் நடத்தப்படும். இதில், அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கிராமசபைக் குழு உறுப்பினர்களிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உரிய தகுதிகள், குடும்பத்தில் பெண் மட்டுமே பயனாளியாகத் தேர்ந்தெடுக்கத் தகுதி படைத்தவர். அவர்களும் ஏழையாக இருத்தல் வேண்டும். அதோடு, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளராக இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாகக் குடியிருப்பவராக இருக்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒரு நபரேனும் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். தற்போது,சொந்தமாக மாடு, வெள்ளாடு, செம்மறியாடு வைத்திருப்பவராக இருக்கக்கூடாது. அதேபோல, அவரோ, அவரது குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர் எவரும் மத்திய, மாநில அரசுப் பணியிலோ, பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையிலோ பணிபுரிபராக இருக்கக்கூடாது. மேலும், எவரும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாகவும் பதவி வகிக்கக்கூடாது (குடும்பத்தில் உள்ள தாய், தந்தை,கணவன்,மனைவி,மகன்,மகள்,மருமகன்,மருமகள்,மாமனார்,மாமியார் என யாரும்).
 அதேபோல, அரசின் கறவை மாடு வழங்கும் திட்டத்தின் பயனாளிகளாக இருக்கக்கூடாது. இரண்டு ஆண்டுகள் ஆடுகளை வைத்து பராமரிப்பவராக இருக்க வேண்டும் (அதாவது, இரண்டு ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் ஆடுகளை விற்பனைசெய்யக்கூடாது). குறைந்தப்பட்சம் 30 சதவிகிதம் பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் (ஆதிதிராவிடர்கள் 29 சதவிகிதம்,பழங்குடியினர் 1 சதவிகிதம்). இதே திட்டத்தில் ஏற்கெனவே சம்பந்தப்பட்டவர்கள் பயனடைந்தவர்களாக இருக்ககூடாது.
 23.08.2017 ம் தேதி அம்மாபட்டி,அணைப்பாளையம்,ஆரியூர்,அத்திப்பாளையம்,தேவர்மலை,ஆத்தூர்,பூலாம்பாளையம்,கடம்பக்குறிச்சி ஆகிய 7 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் மற்றும் 24.08.2017 ம் தேதி காதப்பாறை,களப்பள்ளி,ஹிரனிமங்கலம்,ஆண்டாங்கோயில் மேற்கு, அப்பிபாளையம், மார்ச்சம்பட்டி,சின்னியம்பாளையம் ஆகிய 7 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும்பொருட்டு அந்தந்தக் கிராமங்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.