’’தினகரனை நீக்குவதுபற்றி முதல்வர் பழனிசாமி எம்.எல்.ஏ.க்களிடம் ஆலோசிக்கவில்லை’’ ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ பாய்ச்சல்

’’தினகரனை கட்சியிலிருந்து நீக்குவது பற்றி முதல்வர் பழனிச்சாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களிடம் ஆலோசிக்கவில்லை. கட்சியிலிருந்து ஒருவரை நீக்கும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உண்டு’’ என கோவில்பட்டியில் ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ-வும் தினகரன் ஆதரவாளருமான சுந்தரராஜன் கூறினார். 

 

ottapidaram mla

மதுரை மேலூரில் நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள கோவில்பட்டியிலிருந்து ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சுந்தரராஜன் தலைமையில் வேன்களில் மதுரைக்குக் கிளம்புவதற்கு முன், கோவில்பட்டியிலுள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர்ராஜன், ‘’ அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்டதால்தான்  முதல்வர் பழனிசாமிக்கு 22 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தோம்.  அ.தி.மு.க என்ற குடும்பத்திற்குள் சிலரது மறைமுகத் தூண்டுதலினால் தற்போது குடும்பச் சண்டை நடக்கிறது. அதனால் பிரிவுகள் ஏதுமில்லை. விரைவில் எல்லாம் சரியாகி, இணைந்துவிடுவோம். கட்சியின் துணைப்  பொதுச்செயலாளரான தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதுபற்றி முதல்வர் பழனிசாமி, எம்.எல்.ஏ-க்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை.

கட்சியிலிருந்து ஒருவரை நீக்குவதற்கு, பொதுச் செயலாளருக்கும் பொதுக் குழுவுக்கும் மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. முதல்வர்  அவராக முடிவெடுத்தால், அது எப்படி சாத்தியமாகும்? தினகரனுக்கு எதிராக அவர் கொண்டுவந்த தீர்மானம் ஏதும் செல்லாது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் வந்தாலும் அவரை வரவேற்போம். அ.தி.மு.க இருக்கும் வரை பா.ஜ.க ஆட்சிக்கு வராது. அது சாத்தியமில்லாத ஒன்று. மேலூரில் நடக்கும் பொதுக்கூட்டம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!