ஏசி இல்லாத ஓட்டல்களிலும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி!

‘ஏசி மற்றும் ஏசி இல்லாத பகுதி என இரண்டு வசதிகளையும் பெற்றிருக்கும் ஒரு ஓட்டலில், ஏசி இல்லாத இடங்களில் சாப்பிட்டாலும் அல்லது உணவைப் பார்சல் வாங்கிக்கொண்டு சென்றாலும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும்' என அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஜிஎஸ்டி

பொதுவாக, சென்னை போன்ற பெருநகரங்களில் வழும் மக்கள், பெரும்பாலும் உணவு விஷயத்துக்கு அதிக செலவை செய்யவேண்டியுள்ளது. அது குடும்பமாக வாழ்ந்து வந்தாலும் சரி அல்லது பேச்சிலராக இருந்தாலும் சரி பல நேரங்களில், பல இடங்களில் ஏதோ ஒரு ஓட்டலில் தங்களது பசியைப் போக்கவேண்டியுள்ளது. ஏனெனில், சென்னை போன்ற நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே சென்று சாப்பிடவும், ஏதோ ஒரு வகையில் பொழுதைப்போக்கவும் பலரும் விரும்புகிறார்கள்.

ஒன்று, அவர்களின் பணி காரணமாக மன அழுத்தம். இன்னொன்று வார நாள்களில் அவசரம் அவசரமாகச் செய்யும் சமையலுக்கு, வார இறுதி நாள்களில் விடுமுறையளித்து குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ தங்களது நேரத்தை அதிகம் செலவிட விரும்புகின்றனர். இதுபோன்ற தருணத்தில் பீச், பார்க் என எங்கு சுற்றினாலும் இறுதியில் தஞ்சம் புகும் இடம்  ஓட்டல்கள்தான். ஜி.எஸ்.டி காரணமாக ஓட்டலில் உணவுப்பொருள்களின் விலை ஏற்றத்தால், இனி `ஓட்டலுக்கே போகக் கூடாது' என்ற மனநிலைக்கு யாரும் வரவில்லை. ஏனெனில், வேறு வழியில்லை. ஆனால், இப்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப்போல அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி விதிமுறைகளின்படி, ஏசி இல்லாத ஓட்டல்களில் உணவுப்பொருள்களுக்கு 12 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏசி ஓட்டல்களுக்கு 18 சதவிகிதம் வரியும், ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி வரியும் வசூலிக்கப்படுகிறது. எனினும், ஏசி மற்றும் ஏசி இல்லாத பகுதி என இரண்டுமே கொண்டிருக்கும் ஒரு ஓட்டலில், ஒருவர் ஏசி இல்லாத இடங்களில் உணவு சாப்பிட்டால், ஜி.எஸ்.டி வரி எவ்வாறு வசூலிக்கப்படும் என்பது குழப்பமாகவே இருந்தது. இந்நிலையில் இப்போது இந்தக் குழப்பத்தை மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் (CBEC-Central Board of Excise and Customs) நிவர்த்திசெய்துள்ளது. ஆனால், இது சாமானியர்களுக்கு சுமையாகவே அமைந்துள்ளது. 

‘ஏசி மற்றும் ஏசி இல்லாத பகுதி என இரண்டுமே கொண்டிருக்கும் ஒரு ஓட்டலில், ஏசி இல்லாத இடத்தில் ஒருவர் உணவு சாப்பிட்டாலும் அல்லது உணவைப் பார்சல் வாங்கிக்கொண்டு சென்றாலும் அவர் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். மதுபான வசதியுடன்கூடிய ஓர் உணவகத்தின் கீழ்த்தளத்தில் ஏசி இல்லாத இடத்தில் உணவு சாப்பிட்டாலும், அந்த உணவகத்தின் முதல் தளத்தில் மதுபானம் மற்றும் ஏசி வசதியுடன் உணவு வழங்கப்படுகிறது எனில், கீழ்த்தளத்தில் ஏசி இல்லாத இடங்களில் சாப்பிட்டால் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும். இந்த  ஓட்டலில் சாப்பிட்டால் மட்டுமல்ல, உணவைப் பார்சல் வாங்கிக்கொண்டு சென்றாலும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்' என்ற அறிவிப்பு அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதனால் 1,000 ரூபாய்க்கு ஒருவர் தனது குடும்பத்துடன் வெளியே ஒரு ஓட்டலில் சாப்பிட்டால், வரியாக மட்டும் 180 ரூபாய் செலுத்தவேண்டியுள்ளது. 

ஆரம்பத்தில் ஜி.எஸ்.டி வரியும் விலையேற்றமும் எல்லாம் ஒருசில நாள்கள் மட்டுமே பேசப்பட்டன; விவாதிக்கப்பட்டன. இப்போது இதுகுறித்து யாரும் அதிகம் பேசுவதாக இல்லை. ஏனெனில், நம் மக்கள் எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் போகப்போகப் பழகிக்கொள்ளும் மனநிலைக்கு மாறிவிட்டனர். பணம் வைத்திருப்பவர்கள், தேவைக்கு அதிகமாகச் சம்பாதிப்பவர்கள், உணவு பிரியர்கள் இந்த விலையேற்றங்களை எளிதில் கடந்துபோய்விடுவார்கள். ஆனால், சாமானியர்கள் என்ன செய்வது? `நிம்மதியாகச் சாப்பிடக்கூட விட மாட்டார்களா?' என அன்றாடம் புலம்பிக்கொண்டே கடந்து செல்ல பழகிக்கொள்ளவேண்டியதுதானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!