கதவு இல்லாத இடத்திலும் களவு போகாத வாகனங்கள்! அதிசய கிராமம்!

கிராமம்

நெல்லை மாவட்டம் மாறந்தை கிராமம், அதிசயிக்கத் தகுந்த வகையில் பூட்டப்படாத சைக்கிள், பைக்குகள் அப்படியே நிற்கின்றன. அவற்றை யாருமே திருடிச் செல்வதில்லை. 

பூட்டிய வீட்டை உடைத்துக் கொள்ளையடிக்கும் காலம் இது. சைக்கிள்கள், பைக்குகளைத் திருடிச்செல்ல வேண்டும் என்பதற்காகவே கும்பல்கள் அலைவதுண்டு. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் நிறுத்தி லாக் செய்யப்பட்ட பைக்குகளைக்கூட திருட்டுக் கும்பல்கள் திருடிச்செல்வதுண்டு. இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், பூட்டாமலே நிறுத்தப்படும் சைக்கிள்கள், சாவி எடுக்காமலே நிறுத்தப்படும் பைக்குகள் திருடுபோவதில்லை என்பது அதிசயம் அல்லவா?

மாறாந்தை கிராமம்

நெல்லை-தென்காசி சாலையில் இருக்கிறது, மாறாந்தை கிராமம். தென்காசி சாலையின் ஓரத்தில் உள்ள இசக்கி அம்மன் கோயில் முன்பு பேருந்து நிறுத்தம் உள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அரசு தனியார் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள், இந்தப் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து பஸ் ஏறுகிறார்கள். அத்துடன், விவசாயத்துக்குத் தேவையான உரம், பூச்சி மருந்துகள் வாங்குவதற்கும் தங்களுடைய விளைபொருள்களை விற்பனைசெய்ய நெல்லைக்குச் செல்வதற்கும் அந்தக் கிராமத்தினர் இந்தப் பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்துகின்றனர். 

வெளியிடங்களுக்குச் செல்பவர்கள், அவசரத்தில் தங்களுடைய வாகனங்களைப் பூட்டாமல் அப்படியே நிறுத்திவிட்டு பஸ்ஸில் ஏறிச் சென்றுவிடுகிறார்கள். அங்கு நிறுத்தப்படும் வாகங்கள் திருடப்படுவதே இல்லை. வாகனத்தில் வைக்கப்படும் பொருள்களைப் பற்றியும் கவலைப்படாமல் நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். எந்தப் பொருளையும் யாரும் களவாடிச் செல்வதில்லை. இது எப்படிச் சாத்தியமாகிறது? 

இசக்கி அம்மன்

மாறாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, ’’இங்குள்ள இசக்கி அம்மன்மீது அனைவருக்குமே அச்சம் இருக்கிறது. அதனால், இந்தக் கோயில் வளாகத்தில் நிறுத்தப்படும் எந்தப் பொருளும் களவுபோவதில்லை. முன்பு ஒரு முறை சைக்கிள் ஒன்றை திருடிச்சென்ற நபருக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கு. அதனால், அவனே சைக்கிளைக் கொண்டுவந்து விட்டுட்டான். அதன்பிறகு, யாருமே இங்கே திருடுவதில்லை. 

அவசரமாக வேலைக்குச் செல்பவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்பவர்களும், பஸ் வந்துவிட்ட அவசரத்தில் வாகனங்களை கோயில் வளாகத்தில் நிறுத்திவிட்டு, ஸ்டாண்டு கூடப் போடாமல் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிவிடுவார்கள். அவர்கள் எப்போது திரும்பி வருகிறார்களோ, அப்போது வரை வாகனத்துக்கு பாதுகாப்பு இந்தக் கோயில்தான். அதனால் இங்கே யாரும் எந்தப் பயமும் இல்லாமல் இருக்கிறார்கள்’’ என்கிறார்கள். 

நிச்சயமாக இந்தக் கிராமம் வித்தியாசமானதாகவே இருக்கிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!