தூத்துக்குடியில் அனுமதியின்றி வயர்லெஸ் கருவிகள் விற்ற 3 பேர் கைது! | Three people arrested for selling wireless equipment without permission in Thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (14/08/2017)

கடைசி தொடர்பு:11:25 (15/08/2017)

தூத்துக்குடியில் அனுமதியின்றி வயர்லெஸ் கருவிகள் விற்ற 3 பேர் கைது!

தூத்துக்குடியில் அனுமதியின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் கருவிகளை போலீஸார் பறிமுதல் செய்து, இதில் சம்பந்தப்பட்ட 3 பேரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

wirlless seized in tuticorin

தூத்துக்குடி பெரியபள்ளிவாசல் பஜாரில் உள்ள காம்ப்ளக்ஸில் இருக்கும் கடைகளில் அனைத்துவிதமான எலக்ட்ரானிக் பொருள்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஒரு கடையில் காவல்துறை மற்றும் அரசின் பல துறைகளில் பயன்படுத்தப்படும் வயர்லெஸ் கருவிகள் விற்பனை செய்யப்படுவதாக தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, போலீஸார் இந்த காம்ப்ளக்ஸில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியதில் ரேடியோ வயர்லெஸ் ரிசிவர்கள், வாக்கி டாக்கிகள் மற்றும் இவற்றை இயக்குவதற்குத் தேவையான சாதனங்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. கடைக்குள் இருந்த 57 வயர்லெஸ் கருவிகளையும், மற்றொரு கடையின் உரிமையாளரான சாகுல் என்பவரது வீட்டில் சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வயர்லெஸ் கருவிகளையும் காவல்துறை பறிமுதல்செய்தனர்.    

walky talky seized

இது தொடர்பாக அக்கடையின்  உரிமையாளர் ஷேக்மீரான் மற்றும் அவரது உறவினரான காஜா முகைதீன் மற்றும் கடை ஊழியர் தாஜூதீன் ஆகியோரை காவல்துறை கைதுசெய்தது. போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், கேரள மாநிலம் கொச்சின் பகுதிகளுக்கு இதுவரை 7 வயர்லெஸ் கருவிகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுபோன்ற வயர்லெஸ் கருவிகளை வைத்திருக்க மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையில் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்பதால், போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வயர்லெஸ் கருவிகளால் போலீஸாரின் தகவல் பரிமாற்றத்தை ஒட்டுக்கேட்க பயன்படுத்தப்பட்டதா என மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். காம்ப்ளக்ஸ் கடைகளில் வயர்லெஸ் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க