வெளியிடப்பட்ட நேரம்: 11:19 (15/08/2017)

கடைசி தொடர்பு:11:39 (15/08/2017)

தினகரனைச் சந்தித்தாரா ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ?!

மதுரையில் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ. மாணிக்கம் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியானது. இதனை சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ-வான மாணிக்கம் மறுத்துள்ளார்.


அ.தி.மு.க. தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியபோது, அவரை முதன்முதலில் ஆதரித்த எம்.எல்.ஏ-க்களில் ஒருவர் சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மாணிக்கம்.

’ஜெயலலிதா அடையாளம் காட்டிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான். அவரது உண்மையான விசுவாசி என்பதால், நான் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறேன்’ என்று கூறி ஓ.பன்னீர்செல்வத்துக்கு தனது ஆதரவை மாணிக்கம் தெரிவித்தார். கட்டாயத்தின் பெயரில் அவரை முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மாணிக்கம் கூறியிருந்தார். இந்நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிடச் சென்ற டி.டி.வி. தினகரனுடன், மாணிக்கம் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை மேலூரில் தினகரன் தரப்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய தினகரன், ’கோட்டையில் அமர்ந்திருக்கும் 30 பேரால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த எம்.எல்.ஏ-க்கள் சிலர் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும் பேசியிருந்தது’ குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விளக்கமளித்த மாணிக்கம், ’நான் தினகரனை சந்திக்கவில்லை’ என மறுத்துள்ளார்.