வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (15/08/2017)

கடைசி தொடர்பு:15:41 (15/08/2017)

முதலமைச்சரை ராஜினாமா செய்யக் கோராதது ஏன்? - கமல் கேள்வி

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பல்வேறு கருத்துகளை ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். 

நடிகர் கமல்ஹாசன்.

தமிழக அரசில் உள்ள ஊழல்கள் குறித்து அமைச்சர்களுக்கு டிஜிட்டல் வடிவில் புகார் அனுப்புங்கள் என்று தமிழக மக்களுக்கு கமல் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து, தமிழக அரசின் இணையதளத்திலிருந்து அமைச்சர்களின் அதிகாரபூர்வ இ-மெயில் முகவரிகள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும், பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முட்டைகள் குறித்தும் கமலின் ட்விட்டரில் பதிவிட்டார். இந்தநிலையில், கமலின் மற்றொரு ட்வீட் அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அதில், ‘அரசாங்கத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேடுகள் காரணமாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும் என்றால், தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடந்தும், எந்த அரசியல் கட்சியும் முதலமைச்சரின் ராஜினாமாவைக் கோராதது ஏன்?. எனது குறிக்கோள் தமிழகத்தை முன்னேற்றம் அடையச் செய்வதே. என்னுடைய குரலுக்கு வலுச் சேர்க்கும் துணிவு யாருக்கெல்லாம் இருக்கிறது?. தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் அதற்கான கருவி மட்டுமே. கருவியின் முனை மழுங்கிவிட்டால் வேறு கருவிகளைக் கண்டறிவோம். ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், லெல்வோம்’ என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். இதுவரை முதலமைச்சர் குறித்து நேரடியாக எந்தவொரு விமர்சனமும் செய்யாத கமல், இந்த ட்வீட் மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நேரடியாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.