வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (15/08/2017)

கடைசி தொடர்பு:17:00 (15/08/2017)

நெல்லையில் 'கால் யுவர் கலெக்டர்’ திட்டம் தொடக்கம்!

புதிய திட்டம்

நெல்லையில் நடந்த சுதந்திர தின விழாவின்போது, பொதுமக்கள் பயனடையும் வகையில், ‘கால் யுவர் கலெக்டர்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் 71-வது சுதந்திர தின விழா, வ.உ.சி மைதானத்தில் கொண்டாடப்பட்டது. கடந்த சில வருடங்களாக அண்ணா விளையாட்டு அரங்கம், ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் இந்த விழா நடத்தப்பட்டு வந்தது. ஆனால், நகரின் மையப் பகுதியில் இருக்கும் வ.உ.சி மைதானத்திலேயே மீண்டும் சுதந்திர தின விழாவை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக நல அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். 

திட்டம்  அறிமுகம்

அதனை ஏற்று இந்த ஆண்டு வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. தேசியக் கொடியை ஏற்றிவைத்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், சுதந்திரப் போராட்டத் தியாகிகளை அவர் கெளரவித்தார். அத்துடன், காவல்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. 

சந்தீப் நந்தூரி

இந்த நிகழ்ச்சியின்போது, ’கால் யுவர் கலெக்டர்’ என்ற திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் மூலம், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியின் செல்போன், வாட்ஸ்-ஆப் நம்பர், இ-மெயில் முகவரி, ஃபேஸ்புக், டுவிட்டர் முகவரி உள்ளிட்டவை போஸ்டர்களாக அச்சிடப்பட்டு பொதுமக்களைச் சென்றடைய வகை செய்யப்படும். இதன் மூலம் சாதாரண மனிதர்களும் தங்களின் குறைகளையும் ஆலோசனைகளையும் மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்க வாய்ப்பு உருவாகும். இந்தத் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

சமூக ஆர்வலர் மகேஷ்இது குறித்து சமூக ஆர்வலரும் அன்னை தெரசா சமூக நல அறக்கட்டளை நிர்வாகியுமான மகேஷ் கூறுகையில், ’’நெல்லை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி மக்களுக்கு பயன் அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கால்வாய்கள், குளங்கள் தூர்வாரப்பட நடவடிக்கை எடுத்து வருகிறார். தாமிரபரணி ஆற்றை 8 கி.மீ தூரத்துக்கு சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தார். அத்துடன், ஏழை, எளிய மக்கள் பயன் அடையும் வகையில், ‘அன்புச் சுவர்’ திட்டத்தை தமிழகத்திலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தினார். 

இப்போது, படித்தவர்கள் மட்டும் அல்லாமல் சாமான்ய மக்களும் தன்னை சுலபமாகத் தொடர்பு கொள்ளும் வகையில் ’கால் யுவர் கலெக்டர்’ என்கிற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். இதன் மூலமாக படித்தவர்கள் அவரை வாட்ஸ்அப், இ-மெயில், ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமாக தொடர்புகொள்ள முடியும். சாதாரண மக்கள் அவரது செல்போன் எண்ணில் தொடர்புகொள்ள வசதி கிடைத்திருக்கிறது. இதன்மூலம் மக்கள் தங்களுடைய குறைகளை ஆட்சியரிடமே சொல்லி நிவாரணம் தேடிக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதனால் படித்தவர்கள் மட்டும் அல்லாமல் பாமரர்களும் அவரைப் பாராட்டுகிறார்கள்’’ என்றார்.

தமிழகத்திலேயே முதல் முறையாக இந்த திட்டத்தை நெல்லை மாவட்டத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன.