வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (15/08/2017)

கடைசி தொடர்பு:17:15 (15/08/2017)

எஸ்.பி.,யிடம் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் புகார்!

edapadi palanisamy

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தவறாகச் சித்திரித்து மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் உலா வருகிறது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான வீரபாண்டி அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வரதராஜ் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகைப்படத்தில், பச்சை நிற சேலையுடன் மதுபானக் கடை ஒன்றின் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பெண்ணின் முகத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முகம் பொருந்தும் படி மார்ஃபிங் செய்யப்பட்டிருக்கிறது. இதுபற்றி வீரபாண்டி அ.தி.மு.க., ஒன்றியச் செயலாளர் வரதராஜிடம் கேட்டதற்கு, 'ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் மூலமாக இந்த தகவல் எனக்கு தெரியவந்தது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை, எடப்பாடி பழனிசாமி சீரும் சிறப்புமாக செய்துகொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர், அவரது புகைப்படத்தை தவறாக சித்திரித்து வாட்ஸ்அப்பில் பரப்பி வருகின்றனர். மேலும், ஆட்டையாம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த சிலர்தான் முதலமைச்சரின் புகைப்படத்தை மார்ஃபிங் செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. முதலமைச்சரை தவறாகச் சித்திரித்து புகைப்படம் வெளியிட்டவரை உடனடியாகக் கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக சேலம் எஸ்.பி., ராஜனிடம் புகார் கொடுத்தேன். அவரும் உடனே விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்' என்றார்.