வெளியிடப்பட்ட நேரம்: 17:17 (15/08/2017)

கடைசி தொடர்பு:17:48 (15/08/2017)

'70 ஆண்டுகள்... 127 நாள்கள்!' சுதந்திர தினத்தில் நெடுவாசலிருந்து ஒரு குரல்

நெடுவாசல்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நிறுவப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஏப்ரல் 12-ம் தேதி தொடங்கிய மக்களின் போராட்டம் 127 நாள்களைக் கடந்து தொடர்கிறது. இயற்கைச் சூழலுக்கும் மனித குலத்துக்கும் எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்த நெடுவாசல் போராட்டம் உலகம் முழுவதும் திரும்பிப் பார்க்கப்பட்டது. விவசாய பூமியில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்றவர்களும் கூட நெடுவாசலுக்காக போராட்டம் நடத்தினர். உலகத்தின் பல்வேறு மக்கள் இதைக் கண்டுகொண்டனர். ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்வதாக இல்லை. 

அதனால் தங்கள் காதுகளை இறுக மூடிக்கொண்ட மத்திய மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒவ்வொரு நாளும் விவசாயிகள் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்று இந்தியாவின் 71-வது சுதந்திர தினத்தை நாம் கோலாகலமாக கொண்டாடி வரும் அதே நேரத்தில், இனி இறப்பைத் தவிர வேறு வழி தெரியவில்லை என கண்ணீர் விடுகின்றனர் விவசாயிகள். 

வெள்ளையர்களிடம் இருந்து பாடுபட்டு வாங்கிய சுதந்திரத்தை அரசியல்வாதிகளிடம் இழந்துவிட்டதாகக் கதறுகின்றனர், நெடுவாசல் போராட்டக் களத்தில் நிற்கும் மக்கள். அந்த மக்களுக்கு ஆதரவு தருவதாகக் கூறிக்கொண்டு நெடுவாசல் களத்துக்கு வரும் அரசியல்வாதிகள், இறுதியாக "எங்களை ஒரு முறை தமிழகத்தின் முதலமைச்சராக அமர்த்திப் பாருங்கள். உங்கள் பிரச்னைகளை தீர்த்துவிடுகிறோம்" என்று போராட்டக் களத்தை அரசியல் மேடையாக்கிவிட்டு திரும்பிச் செல்கின்றனர். 

நெடுவாசல்

இந்த அவலங்களிலிருந்து மீள முடியாத நெடுவாசல் போராளிகளின் உள்ளக்குமுறல்கள் காற்றில் இப்படி மிதந்து கேட்கிறது....
“சுதந்திர தினம் கொண்டாடப்படும் இந்நாளில் மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள், போராட்டக் களத்தில் இருந்து கேட்கிறோம், இது எங்கள் பூமி, எங்கள் விவசாய நிலம், எங்கள் உழைப்பு. ஆனால் எங்களுக்கே இங்கு இடமில்லை என்றால் நாங்கள் எங்கு செல்வது?... மூன்று வேளை தாராளமாக நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால் ஒரு வேளை கூட வயிறு நிறைய சாப்பிடாமல் பசியுடன் 'விவசாயம்தான் எங்கள் உயிர் மூச்சு’ என விவசாயம் செய்த நாங்கள் கால் வருடங்களுக்கு மேலாக போராடுகின்றோம், ஆனால், ஒருவரும் திரும்பிப் பார்க்கவில்லை. 

சுதந்திர தினமான இன்று நாங்கள் எங்களுடைய முன்னோர் பெற்றுத் தந்த சுதந்திரத்தை மதிக்கின்றோம். எங்கள் நெஞ்சின்மீது நம் மூவர்ண தேசியக் கொடி எப்போதும் எங்கள் உயிர் மூச்சாய் இருக்கும். ஆனால், இன்னும் எத்தனை நாள்கள் நாங்கள் இருப்போம் என்று தெரியவில்லை. நாங்கள் என்றால் போராட்டக் களத்தில் நிற்கும் எம் மக்கள். காரணம் வீட்டில் இருந்த அனைத்தையும் அடகு வைத்து விட்டு போராட்டத்துக்கு வருவோருக்கு ஒரு விவசாயியாக உணவளித்துவிட்டோம், நாங்கள் ஒரு வேளைக் கூட உண்ணாமல். இனிமேல் விற்பதற்கோ வைப்பதற்கோ எங்களிடம் ஒன்றும் இல்லை எங்கள் உயிரைத் தவிர. எங்களுக்கு உண்மையான சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எங்கள் நிலங்களை எங்களுக்கே திருப்பித் தாருங்கள்....

கண்ணீர் விடுவதற்கு கண்களில் கூட ஈரம் இல்லை, ஆனால், மூச்சு இருக்கும் வரை நெடுவாசல் மக்கள் போராடுவோம்; எங்கள் நன்மைக்காக இல்லை; விவசாயம் அழியக்கூடாது என்பதற்காக!

நெடுவாசல்

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் உருண்டோடிவிட்டன. தேர்தல் நேரத்தில் இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று கூறினார்கள். உங்களை மன்றாடிக்கேட்கிறோம் மோடி அவர்களே, நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்.  எங்கள் நிலங்களை எங்களுக்கே திருப்பித் தாருங்கள், பிள்ளையைப் பெறுவதற்கு ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை எவ்வளவு அவசியமோ அப்படித்தான், நாங்கள் உயிர் வாழ்வதற்கு எங்கள் நிலம் வேண்டும். அன்று சுதந்திரம் பெற காந்தி பின்பற்றிய அகிம்சை என்ற ஆயுதத்தை கையிலெடுத்துதான் இன்றுவரை போராடி வருகின்றோம், இதுவரை எங்களுக்குத் தீர்வு கிடைக்கவில்லை; இன்று சுதந்திர தினம். இன்றாவது எங்களுக்கு உண்மையான விடுதலையைக் கொடுங்கள். எங்கள் தொழிலைச் செய்ய வழி ஏற்படுத்தித்தாருங்கள்.

மாபாதகக் கொலை புரிந்தவனுக்குக் கூட சுதந்திர தினத்தன்று அவனது விடுதலை குறித்து பரிசீலிக்கப்படுவதுண்டு. தன் பசியை மறந்து அடுத்தவரின் பசிக்காக போராடும் விவசாயிகளுக்கு அந்த உரிமை கிடையாதா..? எங்கள் கோரிக்கைகளை நீங்கள் ஏறிட்டுக் (பார்க்கவே) கேட்கவே மறுக்கிறீர்கள். நேற்றுவரை நாட்டின் விடுதலை சுதந்திர தினமாக கொண்டாடப்பட்டது, இனி வருங்காலத்தில் விவசாயத்தின் விடுதலை மட்டுமே உண்மையான சுதந்திர தினமாக இருக்கும்!’’


டிரெண்டிங் @ விகடன்