வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (15/08/2017)

கடைசி தொடர்பு:20:06 (15/08/2017)

'பாதாளம் வரை எது பாயும்?' அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்லாமல் விட்டகதை! 

மந்திரி திண்டுக்கல் சீனிவாசன்

மிழக வனத்துறை மந்திரியான திண்டுக்கல் சீனிவாசன்,   'பாதாளம் வரை எது பாயும்' என்று செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.   பின்னர் கேள்வி எழுப்பிய அவரே, அதற்கு விடை சொல்லாமல் விட்ட கதை  அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர் மந்திரி  திண்டுக்கல் சீனிவாசன். சுதந்திரத் திருநாளான  இன்று, தமிழக கோயில்களில்  அமைச்சர்கள்  அன்னதானம் அளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  வருகை தந்திருந்தார்.


பின்னர் அவரிடம் செய்தியாளர்கள், 'டி.டி.வி. தினகரன் நடத்திய கூட்டத்துக்கு 20 தமிழக எம்.எல்.ஏ.க்கள் சென்றுள்ளனரே?' என்று கேள்வி எழுப்பினர். அப்போது  திண்டுக்கல் சீனிவாசன்  "இங்கே பாருங்க, நீங்களெல்லாம் (பத்திரிகையாளர்கள்) சின்னப் பிள்ளைங்க. உங்களுக்குத் தெரியாது. பெரும்பான்மையை நிரூபிக்க, 117 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே போதும்.  இப்போது எங்களிடம் இருப்பது 115 எம்.எல்.ஏ.க்கள்.  தேவைப்படுவது இன்னும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தான். எதுவோ, 'பாதாளம் வரைக்கும் பாயும்' என்கிறார்கள், அது உங்களுக்குத் தெரியாதா? எங்கிருந்தாலும் அவர்கள் வரமாட்டார்களா என்ன?" என்று பதிலளித்தார். கடைசிவரையில்  பாதாளம் வரை எது பாயும் என்ற கதையை  திண்டுக்கல் சீனிவாசன் சொல்லாமலே விட்டு விட்டாலும் அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.