சுதந்திர தின சிறப்புப் பதக்கங்களைக் குவித்த திருச்சி போலீஸ்

 

காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்த காவலர்களுக்கு இன்று பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதில், திருச்சியைச் சேர்ந்த பல காவல்துறை அதிகாரிகள் பதக்கங்களைக் குவித்தனர்.

இன்று காலை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கடந்த 2016-ம் ஆண்டில் தமிழக காவல்துறையில் சிறப்பாகப் பணி புரிந்ததற்காக, திருச்சி மாநகர காவல் ஆணையர் அருணுக்கு, இந்திய குடியரசுத் தலைவரின் பதக்கத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

மேலும், திருச்சி மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் அருள் அமரன் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு சரக உதவி ஆணையராகப் பணி புரிந்து ஓய்வுபெற்ற அங்குசாமி உள்ளிட்டோருக்கும் குடியரசுத்தலைவர் பதக்கமும் திருச்சி மாநகர காவல்துறையில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பாகப் பணி புரிந்த திருச்சி அமர்வு நீதிமன்றக் காவல் நிலைய தலைமைக் காவலர் கோவிந்தராஜ் மற்றும் மாநகர ஆயுதப்படை தலைமைக் காவலர் அருள் முருகானந்தம் ஆகியோருக்கு காவல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்ததற்கு முதல்வரால் அண்ணா பதக்கமும் வழங்கப்பட்டன.

காவல்துறையில், கடந்த 2016-ம் ஆண்டில் மெச்சத்தகுந்த வகையில் பணி புரிந்தமைக்காக, திருச்சி கைவிரல் ரேகைப் பதிவுக்கூடத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராதாகிருஷ்ணன், கண்டோன்மென்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு சிறப்புச் சார்பு ஆய்வாளர் இருதயராஜ், ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு தலைமைக் காவலர் சேகர், மாநகர குற்றப்பிரிவு பெண் முதல்நிலைக் காவலர் வள்ளி மற்றும் மாநகர ஆயுதப்படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் வெங்கடேஷ்பாபு, முதல்நிலைக் காவலர் சுந்தரமூர்த்தி ஆகியோருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா பதக்கம் வழங்கினார்.

இதேபோல, திருச்சி மாநகர துணை ஆணையராகப் பணி புரிந்து தற்போது மதுரை மாநகர தலைமையிட துணை ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள மயில்வாகனனுக்கும் முதல்வரால் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி பவானீஸ்வரியும் குடியரசுத்தலைவரின் பதக்கம் பெற்றார்.

அதிக அளவில் அண்ணா பதக்கம், குடியரசுத் தலைவருக்கான பதக்கங்களை திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிகாரிகள் பெற்றிருப்பது திருச்சி காவல்துறையினரை மகிழ்ச்சியடையவைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!