எம்.ஜி.ஆர் புகைப்படக் கண்காட்சி திறப்புவிழாவைப் புறக்கணித்த அ.தி.மு.க எம்.பி., எம்.எல்.ஏ-க்கள்!

கடலூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற புகைப்படக் கண்காட்சியை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று திறந்துவைத்தார். இந்தத் திறப்பு விழாவை ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் புறக்கணித்தனர்.

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா முதல்வர் பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் டி.டி.வி.தினகரன் அணியினரும் கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மாவட்டம் தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்துவருகிறது. கடலூரில் இன்று மாலை எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதையொட்டி எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. மஞ்சக்குப்பம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்துவைத்தார். கண்காட்சியை அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி.சம்பத், தங்கமணி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதனிடையே, கடலூர் எம்.பி அருண்மொழித்தேவன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி மற்றும் பண்ருட்டி எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ முருகுமாறன், விருத்தாசலம் எம்.எல்.ஏ கலைச்செல்வன் ஆகியோர் எம்ஜிஆர் புகைப்படக் கண்காட்சி திறப்பு விழாவைப் புறக்கணித்தனர். அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்தப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் சம்பத்துக்கு எதிராக கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!