வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (16/08/2017)

கடைசி தொடர்பு:11:25 (16/08/2017)

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வைத் தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்றம்.


மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக தமிழக அரசு இயற்றியுள்ள அவசர சட்ட முன்வரைவுக்காகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மருத்துவக் கவுன்சலிங் நடைமுறைகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை. 

இந்தநிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா முன்னிலையில் சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், தமிழகத்தில் உடனடியாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்று ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். மாணவர்களின் எதிர்காலம் கருதி இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கோரிக்கை விடுத்திருந்தார். இதைக் கேட்ட நீதிபதி இந்த மனு மீது நாளை முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நீட் தேர்விலிருந்து நடப்பாண்டிற்கு மட்டும் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வழிவகை செய்யும் மசோதா தொடர்பாக இன்று மாலையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டால், அதை எதிர்த்தும் வழக்கு தொடரப்படும் என்று சிபிஎஸ்இ மாணவர்கள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.