கட்டண உயர்வு கோரிக்கையால் எட்டாக்கனியாகும் மருத்துவப் படிப்பு!

நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் உள்ள கட்டணத்தைப் போலவே மருத்துவப் படிப்புக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்திருக்கிறார்கள் தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர். இந்த கோரிக்கையின் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு கானல் நீராகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு

ஏற்கெனவே, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைச் செலுத்தி, +1 பாடத்தைப் படிக்காமலேயே +2 பாடத்தை மட்டும் படிக்கிறார்கள். இதன்மூலம், தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று அரசு கல்லூரிகளில் சேர்கிறார்கள். சொற்ப எண்ணிக்கையிலே அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்லூரியில் சேர்க்கிறார்கள். இந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் கட்டண உயர்வால் மருத்துவப் படிப்பு எட்டாக்கனியாகிவிடும் என்ற நிலை உருவாகி வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் 18.5 லட்சம் முதல் 22.5 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி கல்லூரிகளில் அதிகபட்சமாக 12.5 லட்சம் ரூபாய் என்று தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. எனவே, நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளுக்கு இணையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவ கல்லூரிகள் தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிடம் கோரிக்கை  வைக்கிறார்கள்.

இந்தக் கோரிக்கையை ஏற்று விரைவில் மருத்துவ படிப்புக்கான கட்டண நிர்ணயக் குழு கூடி விவாதிக்கும் என, தமிழ்நாடு மருத்துவக் கவுன்சலைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மருத்துவப் படிப்புஇதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவ சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் "நீட் தேர்வின் அடிப்படையில் ஆன்லைன் கலந்தாய்வின் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளின் இடங்களுக்கும் இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இரண்டு முறை நடைபெற்ற கலந்தாய்வு நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 30% இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெற்று பெரும்பாலான இடங்கள் காலியிடங்களாக இருக்கின்றன. இதற்குக் காரணம், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகள் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி இருப்பதுதான். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், பணம் இருந்தால் மட்டுமே நிகர்நிலை மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையை மாற்றி அமைத்திட, நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ படிப்புக்கான கட்டணத்தைக் குறைத்து, குறிப்பிட்ட வருமானம் உள்ள மாணவர்களுக்கு அரசே கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இதே முறையை புதுச்சேரி அரசு மேற்கொள்கிறது. அங்கு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு, இரண்டு லட்ச ரூபாய்க்குக் குறைவான வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசு செலுத்தி வருகிறது. இதைப்போலவே, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் சேரும்போது அவர்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி உதவி வழங்குகிறது.

இதைப்போலவே, நிகர்நிலைக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். ஆண்டு வருமானம் 12 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேரும்போது அவர்களின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். இவ்வாறு செலுத்தினால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நுழைய முடியும். இல்லை என்றால் நீட் தேர்வில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை" என்கிறார் மருத்துவர் ரவீந்திரநாத். 

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு 13,600 ரூபாய். அரசு பல்மருத்துவ கல்லூரியில் சேர இருப்பவர்களுக்கான கட்டணம் ஆண்டுக்கு 11,600 ரூபாய். அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்பவருக்கான கட்டணம் ஆண்டுக்கு 4,00,000 ரூபாய். தனியார் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு அதிகபட்சக் கட்டணம் ரூ.12.5 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளில் 18.5 லட்சத்தில் இருந்து 22.5 லட்சம் வரை ஒவ்வொரு கல்லூரியும் கட்டணத்தை நிர்ணயித்து இருக்கிறார்கள். 

இந்த நிலையில் தனியார் சுயநிதி கல்லூரிகள் கட்டணத்தை உயர்த்தும் போது, மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைவே வாய்ப்புகள் அதிகம். இதனை அரசு கவனத்தில்கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பதே மருத்துவ மாணவர்களின் விருப்பம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!