'அசிங்கப்பட நேரிடும்'- திண்டுக்கல் சீனிவாசனை எச்சரிக்கும் தினகரன் | TTV Dinakaran Warns Dindigul Sreenivasan

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (16/08/2017)

கடைசி தொடர்பு:12:55 (16/08/2017)

'அசிங்கப்பட நேரிடும்'- திண்டுக்கல் சீனிவாசனை எச்சரிக்கும் தினகரன்

''எட்டப்பன் யார் என்பது கண்ணாடியைப் பார்த்தால் ஜெயக்குமாருக்குத் தெரியும்'' என்று கூறிய டி.டி.வி.தினகரன், பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தவர் சசிகலா என்றும் சில விஷயங்களைக் கூறினால், திண்டுக்கல் சீனிவாசன் அசிங்கப்பட நேரிடும் என்றும் எச்சரித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், "எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் கட்சிக்கும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை. தவறான செயல்களை விட்டுவிட்டு, சரியான வழிக்கு அமைச்சர்கள் வர வேண்டும். குற்றச்சாட்டுகளை எண்ணிப்பார்த்து அமைச்சர்கள் தங்களைச் சரிசெய்துகொள்ள வேண்டும். கட்சிக்கு விரோதமாக நடந்துகொள்வோர், தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு விழாக்களில் எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். எம்.எல்.ஏ-க்கள் மிரட்டப்படுகின்றனர்.

பத்து ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். பொருளாளர் பதவியில் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தவர் சசிகலா. பொருளாளர் பதவி கொடுத்தவுடன் என் காலில் விழ வந்தவர், திண்டுக்கல் சீனிவாசன். ஆத்தூர் தொகுதியில் தேர்தலில் நிற்கப் பயந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். மேலும் சில விஷயங்களைக் கூறினால், திண்டுக்கல் சீனிவாசன் அசிங்கப்பட நேரிடும். சசிகலா காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழுந்த புகைப்படத்தை வெளியிட்டால், அவருக்கு அசிங்கமாகும்.

ஜெயக்குமாருக்கு நிதியமைச்சர் பதவி கொடுத்தது நாங்கள்தான். எட்டப்பன் யார் என்பது கண்ணாடியைப் பார்த்தால் ஜெயக்குமாருக்குத் தெரியும். ஓ.பன்னீர்செல்வம் காலைப் பிடித்தாவது அ.தி.மு.க.வை ஒன்றாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் நினைக்கிறார்கள். யார் திருடன் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். ஆட்சியைக் கையில் வைத்திருக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.  கட்சியை கொல்லைப்புறமாகக் கைப்பற்றும் எண்ணத்தில் சில அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள், ஜெயலலிதா வழியில் செல்லவில்லை என்றால், அவர்களுக்கு ஆபத்து நிச்சயம்" என்று எச்சரித்தார்.

மேலும், முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று எந்தக் கட்சியும் வலியுறுத்தாதது ஏன் என்று கமல்ஹாசன் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த தினகரன், நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி சரியான பதில் அளிக்க வேண்டும்" என்றார்.