வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (16/08/2017)

கடைசி தொடர்பு:15:01 (16/08/2017)

சங்கு ஊதி போராட்டம் நடத்திய தபால் ஊழியர்கள்!

கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று மதுரையில் சங்கு ஊதி தொடங்கினர். இதுவரை தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்தும் மத்திய அரசை எதிர்த்து லட்சக்கணக்கான கிராமிய அஞ்சல் ஊழியர்கள் இப்போராட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியுள்ளனர்.

கோட்ட அளவில் மதுரைத் தலைமை அஞ்சல் அலுவலக வாயிலில் நடந்த போராட்டத்தில் திரளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரை செய்ததை உடனே அமல்படுத்தவும், எட்டு மணி நேர வேலை வழங்கி துறை மூலமாக நிரந்தரப்படுத்தவும், மத்திய நிர்வாக தீர்ப்பாயமும், சென்னை நிர்வாக தீர்ப்பாயமும் வழங்கிய தீர்ப்பின்படி தங்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன் வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். ''தங்கள் கோரிக்கை அரசின் காதில் விழ வேண்டும் என்பதற்காக வலம்புரி சங்கை ஊதி போராட்டம் நடத்தினோம்'' என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

தேனியில் மாவட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தபால் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத் தலைவர் பழனி, செயலாளர் ராஜாங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க