நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்குமா?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகத் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மத்திய அரசிடம் விளக்கம் அளித்துள்ளார்.

 


மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தேர்வை முதலில் எதிர்த்த கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பின்னர், அதை ஏற்றுக்கொண்டன. ஆனால், தமிழகம் மட்டும் நீட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையிலான அவசரச் சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலிடம், சுகாதாரத் துறை, மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட அமைச்சகங்கள் கருத்து கேட்டன. இதுதொடர்பாக அந்த அமைச்சகங்களுக்கு வழக்கறிஞர் வேணுகோபால், தனது கருத்தை அனுப்பியுள்ளார். ஏழு பக்கங்கள் கொண்ட அந்தப் பதிலில், கல்வி மாநில அரசின் பட்டியலில் இருப்பதால் தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்தால் அதற்கு ஒப்புதல் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக அரசின் அவசரச் சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இந்த விவகாரத்தில் நாளை முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது. நீட் விலக்கு தொடர்பாகத் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர், மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சவுத்ரியைச் இன்று சந்தித்துப் பேசினர்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும்படியான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், தமிழகத்தில் உடனடியாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!