வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (16/08/2017)

கடைசி தொடர்பு:17:05 (16/08/2017)

முருகனின் குழந்தைகளைப் பார்த்து உருகிய பினராயி விஜயன்!

ண்மையில் கேரளாவில் நடந்த சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்ற கூலித் தொழிலாளி காயமடைந்தார். சுமார்  7 மணி நேரம் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்காததே, அவரின் மரணத்துக்கு காரணமாக அமைந்தது. முருகனின் இறப்புக்கு காரணமான மருத்துவமனைகளோ மருத்துவர்களோ  இந்தச் சம்பவத்துக்காக கூனிக் குறுகவில்லை. மாறாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் கேரள மக்களின் சார்பாக பகிரங்க மன்னிப்புக் கோரினார். 

பினராயி விஜயன் தமிழச் சிறுவர்களுடன் சந்திப்பு

பலியான முருகனுக்கு பாப்பா என்கிற முருகம்மாள் என்ற மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். முருகனின் வருமானத்தை நம்பிதான் குடும்பம் இருந்தது. அவரும் விபத்தில் சிக்கி இறந்துவிட, முருகனின் மனைவி பாப்பா துடித்துப் போனார். முருகனின் சடலத்தை சொந்த ஊரான சமூகரெங்கபுரத்துக்கு கொண்டு வரக்கூட பணமில்லாமல் திருவனந்தபுரத்தில் பாப்பா தவித்தார். மார்க்சிஸ்ட் கட்சிதான் முருகனின் சடலத்தைத் தமிழகத்துக்கு கொண்டு வர நிதியுதவி செய்தது. 

விபத்தில் முருகன் இறந்திருந்தாலும் நீதிமன்றம் வழியாக அவருக்கு இழப்பீடு கிடைக்க வழியில்லை. இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி ஏற்பட்ட விபத்து இது. மற்றோர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களும் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.  இதனால் முருகனின் குடும்பத்துக்கு கேரள அரசு நிதியுதவி அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்திருந்தது. முருகனின் குழந்தைகள் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக கேரள மார்க்சிஸ்ட் கட்சி நேற்று அறிவித்தது. 

இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று முருகனின் மனைவி பாப்பா மற்றும் குழந்தைகள் சந்தித்தனர். குழந்தைகளிடத்தில் கேரள முதல்வர் அன்புடன் உரையாடினார். முருகனின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு எந்த சமயத்திலும் கேரள அரசு உதவியாக இருக்கும் ' என ஆறுதல் வார்த்தைகள் கூறினார். 

 இந்த புகைப்படம் கேரள முதல்வரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க