வெளியிடப்பட்ட நேரம்: 06:54 (17/08/2017)

கடைசி தொடர்பு:11:21 (17/08/2017)

‛ROOTS: THE SAGA OF AN AMERICAN FAMILY ’ அமெரிக்க - ஆப்பிரிக்கர்களின் வேர்களை அறியும் நாவல்!

இன்று ஆகஸ்ட்-17,  அலெக்ஸ் ஹேலி இயற்றிய `ROOTS: THE SAGA OF AN AMERICAN FAMILY' என்ற நாவல் வெளிவந்து, 41 ஆண்டுகள் ஆகின்றன.

ஃபாண்ட: நாம் இந்தப் புதிய இடத்தில் இப்போது காணும் வெண்ணிலவும், அங்கு நம் கிராமத்தில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் நிலவும் ஒன்றுதானே?

குண்டா: இருக்காது. இந்த இடத்திலெல்லாம் வித்தியாசமாக உள்ளது. பிறகு, நிலா மட்டும் எப்படி ஒன்றாக இருக்கும்?

ஃபாண்ட: நம் வாழ்வு அவ்வளவுதானா குண்டா?

குண்டா: கலங்காதே! நாம் இந்த வெள்ளையர்களை வீழ்த்தி, வீடு திரும்பத்தான்போகிறோம்.

ஃபாண்ட: நீ ஒரு வீரன், அப்படித்தான் சொல்வாய்; அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாய். நான் வேறு ஒன்றை இங்கு வந்து பயின்றிருக்கிறேன், எப்படியாவது உயிர் பிழைத்திட வேண்டும் என்பதை..!

வேர்

இது, ஆப்பிரிக்காவில் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  சுற்றித் திரிந்த `குண்டா' என்கிற இளைஞனுக்கும் அவனின் தோழியான ஃபாண்டவுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல். இளம் வயதிலேயே தங்கள் உறவினர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, கடல் தாண்டி அந்நிய மண்ணில் கரங்கள் கட்டப்பட்டு, வேலிக்குள் அடைக்கப்பட்டு தங்களைச் சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதையே அறியாமல், வாழ்க்கை இருண்டதை மட்டும் உணர்ந்த இரு உள்ளங்களில் ஏற்பட்ட  வார்த்தைப் பரிமாற்றம். இது வரலாற்று ஆவணமும் அல்ல; புனைவும்  அல்ல.

அலெக்ஸ் ஹேலி என்கிற ஆப்பிரிக்க - அமெரிக்க இனத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், தனது குடும்ப வரலாற்றை அறிய தம் முன்னோர்களது வேர்களைத் தேடிச் சென்றபோது, 12 வருட ஆராய்ச்சியின் இறுதியில் கிடைத்ததுதான் இந்தக் குண்டாவின் கதை.

அது எப்படிச் சாத்தியமாகும்?

பண்ணைகளில் கொத்தடிமைகளாக்கப்பட்டும், பல இன்னல்களுக்கு ஆளாகியும், தனது ஆப்பிரிக்கப் பிறப்பை, கலாசாரத்தை, தான் கடந்து வந்த பாதையை, குண்டா தன் மகளுக்குக் கடத்திட தவறவில்லை. இப்படியே அவர்களது வாழ்வியல் பரம்பரைப் பரம்பரையாகச் செவிவழியாகக் கடத்தப்பட்டு அவர்களது குடும்பத்தின் 200 ஆண்டு வரலாறு  குண்டா-வின் ஏழாம் தலைமுறையான  அலெக்ஸ் ஹேலியிடம் வந்து நிறைவடைகிறது. தனது இந்தக் குடும்ப வரலாற்றை, `ROOTS:THE SAGA OF AN AMERICAN FAMILY' என்ற நாவலாகப் படைக்கிறார் ஹேலி. இந்த நூல் வெளிவந்து இன்றோடு (ஆகஸ்ட்-17)  41  ஆண்டுகள் ஆகின்றன. இது, உலகெங்கும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.

குண்டாவின் கதை, வெறும் கதை அல்ல; அமெரிக்க-ஆப்பிரிக்கர்களின் மெய்யான வரலாறு. ஐந்து கோடிக்கும் மேற்பட்ட அமெரிக்க-ஆப்பிரிக்கர்களின் வீடுகளில் அது பைபிளைப்போல பாதுகாத்து வைத்துப் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு பொக்கிஷம். அது அமெரிக்க நீக்ரோக்களின் துயரம் தோய்ந்த வரலாற்றை மட்டும் சொல்வதல்ல, இன்று அமெரிக்கா உலகின் மாபெரும் வல்லரசாக உருவாகிய வரலாற்றில், ஒன்றா... இரண்டா... ஏழு தலைமுறைகளின் இழிவும் அவமானமும் அடிமைத்தனமும் ரத்தமும் ஓய்வறியா உழைப்பும் கலந்துள்ள வரலாற்றைச் சொல்வதாகும்.

 அப்படியென்ன துயரங்கள் நிறைந்த வரலாறு?

புத்தகம்

ஆப்பிரிக்கக் கடலோரக் காடுகள், அவர்களின் துன்பியல் வரலாற்றுக்கு இன்றும் சாட்சி சொல்லி நிற்கின்றன. கடலோரம் ஒரு படகு நிற்கும். தூரக் கடலில் ஒரு கப்பல் காத்திருக்கும். கடலோரக் காடுகளின் இருள் மறைவில் முரட்டு வெள்ளையர்கள் பதுங்கி இருப்பார்கள். ஆப்பிரிக்கக் கறுப்பின ஆண்களும் பெண்களும் அங்கு மரம் வெட்டுவதற்கோ விறகு சேகரிக்கவோ வருவார்கள். அவர்களில் திடகாத்திரமானவர்களை தடித்த கயிறுகளால் ஆன வலைகளை வீசிப் பிடித்து அப்படியே அமுக்கி, படகின் மூலம் கடலில் நிற்கும் கப்பலுக்குக் கொண்டுசென்று நிர்வாணமாக்கி, சங்கிலிகளால் ஒருவரை ஒருவர் பிணைத்துக் கப்பலின் அடித்தளத்தில் வீசிவிடுவார்கள். அந்த அப்பாவிக் கறுப்பின மனிதர்கள், மூத்திரத்திலும் மலத்திலும் கிடந்து வாடுவார்கள். பல மாதப் பயணத்துக்குப் பிறகு அமெரிக்கக் கடற்கரையை நெருங்கும்போது பட்டினியிலும் நோயிலும் இறந்துபோனோரைக் கடலில் வீசி எறிந்துவிட்டு, எஞ்சியோரைக் குளிப்பாட்டி,  உணவளித்து அமெரிக்க அடிமைச் சந்தைகளில் ஏலம்விடுவார்கள். ஏலத்தில் எடுக்கப்பட்ட அடிமைகள், கடுமையாக உழைக்க வேண்டும். தப்பிச் செல்ல முயன்றால், பாதங்கள் வெட்டப்பட்டுவிடும். பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவார்கள். அப்படிப் பிறந்த குழந்தைகள் `கலப்பினக் குழந்தைகள்' (Bi racial) என்ற அவமானத்தைச் சுமந்து திரிய வேண்டும். இது ஆறு தலைமுறைகளுக்கு முந்தைய தலைமுறையின் கதை.   

அமெரிக்காவில் 17 வருடங்களைக் கழித்திருந்த `குண்டா'வைப் பற்றி `ரூட்ஸ்' நாவலில்...

`இவர் இன்னும் ஆப்பிரிக்கர்தானா? இல்லை மற்ற ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்களை அழைத்துக்கொள்வதைபோல் ‘NIGGER  ஆகிவிட்டாரா? இவர் தன் தந்தையை இறுதியாகப் பார்க்கும்போது அவருக்கு என்ன வயதோ, அதே வயது மனிதர் ஆகிவிட்டார் இவர். இருப்பினும், இவருக்கென மகன்கள் இல்லை, மனைவி இல்லை, குடும்பம் இல்லை, சொந்த ஊர் இல்லை, மக்கள் இல்லை, வீடு இல்லை. அவரது கடந்த காலம் எதுவும் அவருக்கு இப்போது உண்மையாகத் தெரியவில்லை. எதிர்காலமும் இல்லை. பிறந்த இடமான காம்பியா செல்லவேண்டும் என்பது முன்பு இவருக்கு ஒரு கனவாக இருந்தது, அந்தக் கனவைக் கண்டுகொண்டே உறங்கிக்கொண்டிருக்கிறாரா? அப்படியென்றால், உறக்கத்திலிருந்து என்றாவது எழுப்பப்படுவாரா?'

அலெக்ஸ் ஹேலியின் ஏழு தலைமுறை முன்னோர்கள் மட்டும் அவர்களுடைய ஒவ்வொரு தலைமுறைக்கும் குடும்ப வரலாற்றைச் சொல்லிச் சென்றிருக்கவில்லையென்றால், ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் அடிமை வரலாறும் அமெரிக்க வெள்ளை இனத்தவரின் கொடூரச் சுரண்டலும் உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அமெரிக்க உருவாக்கத்தில் கறுப்பின மக்களின் ஒப்பற்றப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலே, அமெரிக்க வெள்ளைச் சமுதாயம் வடக்குத் தெற்காகப் பிரிந்து போரிட்ட வரலாற்றை நாம் அறிவோம். ஒபாமா பதவியேற்றபோது கோடிக்கணக்கான அமெரிக்கக் கறுப்பினத்தவர் கண்ணீர்விட்டு அழுத ஒரு காட்சியே அவர்களின் துயர வரலாற்றுக்குச் சாட்சி. இன்று அமெரிக்காவின் உயர் பதவிகளிலும், திரைப்பட நாயகர்களாகவும், மிகச்சிறந்த படைப்பாளிகளாகவும் மனித உரிமைப் போராளிகளாகவும் கறுப்பின (நீக்ரோ) மக்கள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் துயரத்தையே சுமந்து போராடிப் போராடி வளர்ந்துவந்த ஏழு தலைமுறைகள் இருக்கின்றன என்பதை அலெக்ஸ் ஹேலி எடுத்துச் சொல்லியபோது, அமெரிக்க-ஆப்பிரிக்க சமுதாயம் முழுவதும் அவருக்குக் கண்ணீரைக் காணிக்கையாக்கி நன்றியைத் தெரிவித்தது.  

இருப்பினும் இன்றும்கூட அவர்கள் வெள்ளையர்களின் இனவெறியிலிருந்து முழுவதுமாக விடுபடவில்லை. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அமெரிக்க மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் திசைதிருப்புவதற்கு அமெரிக்க ஆளும் வர்க்கம் நிறவெறியை ஊக்குவித்து வருகிறது. கறுப்பின அப்பாவிகள் காவல் துறையால் அவமதிக்கப்படுவதும், கேட்பாரின்றிச் சுட்டுக்கொல்லப்படுவதும் அடிக்கடி செய்திகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இவர்கள் தங்கள் வேர்களையும் அதையொட்டிய வரலாற்றையும் அறிந்திருந்தால் மட்டுமே இவர்களது உண்மையான விடியலுக்கான கலகக்குரலை உயர்த்த முடியும். இன்னும் பல லிங்கன்களும் மார்டின் லூதர் கிங்குகளும் தோன்றி, இறுதியான வெற்றியை ஈட்டுவார்கள்.

எந்த ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமும் தனது வேர்களை, தமது வாழ்வின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கையளித்துச் செல்லவில்லை என்றால், அந்தச் சமூகம் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவது எளிதல்ல.

ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வேர்கள் நமக்கு எதற்கு?

இந்தியாவில்கூட `ஒடுக்கப்பட்ட சமூகம்' பொதுவெளியில் நிர்வாணம் ஆக்கப்பட்டும், மலம் அள்ளவைத்தும், ஊரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டும் பல நூற்றாண்டுகளாகத் துன்பங்களையும் துயரங்களையும் இழிவையும் அவமதிப்பையும் அனுபவித்துவருகிறது. அமெரிக்காவில் கறுப்பர்கள் சமூகத்தைப்போல தனது துயரங்களின் தொடர்கதைக்கான வேர்களைக் கண்டறிவதுதான் அதன் விடுதலைக்கு வழிவகுக்கும். அரசியலிலும் கல்வியிலும் அரசுப் பணிகளிலும் இடஒதுக்கீடு என்பது ஓர் இடைக்கால நிவாரணமே அன்றி விடுதலைக்கான தீர்வு அல்ல.

அது பயணிக்கவேண்டிய தூரம் அதிகம். அமெரிக்காவைப்போலவே இங்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துவருகிறது. ஆனால், அவர்களின் விடுதலைக் குரல் இன்னும் ஓங்கி ஒலிக்காமல் இருப்பதும், அதன் தலைவர்கள் சிலர் ஆளும் வர்க்கத்திடம் விலைபோவதும் அந்தத் தூரத்தை அதிகரிக்கவே செய்யும்.

மாயா ஏஞ்சலோ ஓர் இடத்தில், ``நீங்கள் எந்த அளவுக்கு உங்கள் வரலாற்றை அறிந்திருக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களை நீங்கள் சுதந்திரமாக உணர்வீர்கள்” என்று கூறுவார்.

வரலாற்றை அறிவோம்,

விடுதலை உணர்வைப் பெறுவோம்.

வேர்களைத் தேடுவோம்!             


டிரெண்டிங் @ விகடன்