வெளியிடப்பட்ட நேரம்: 22:56 (16/08/2017)

கடைசி தொடர்பு:22:56 (16/08/2017)

மலேசியாவில் பரிதவிக்கும் கணவரை மீட்கக் கோரி மனைவி மனு!

வேலை நிமித்தமாக மலேசியாவுக்குச் சென்ற கணவர் அங்கிருந்து திரும்பி வர வழியின்றி தவிப்பதாகவும், அவரை மீட்டுத் தரக்கோரியும் நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள தினையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலைக்காக மலேசியாவுக்குச் சென்றார். அங்கு வேலை செய்த இடத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஆனாலும், அவருக்கு வேலை கொடுத்தவர், தொடர்ந்து வேலை செய்யுமாறு வற்புறுத்தியதால் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். 

மலேசியாவில் பரிதவிப்பு

மலேசியாவில் சிக்கியுள்ள செல்வகுமாரை மீட்டுத் தரக்கோரி, அவரது மனைவி சென்சா என்பவர் நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்தார். அவரது மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இது தொடர்பாக மத்திய அரசின் உதவியுடன் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு செல்வகுமாரை மீட்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதனால் செல்சாவும் அவரது குடும்பத்தினரும் நிம்மதி அடைந்துள்ளனர். 

செல்வகுமார்இது தொடர்பாக செல்வகுமாரின் மனைவி சென்சா கூறுகையில், ‘’எங்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனது கணவருக்கு இங்கு வேலை இல்லாத நிலையில் வெளிநாட்டில் வேலைக்குச் செல்ல முடிவு செய்தார். இதனால் ஒரு ஏஜென்டிடம் பணம் செலுத்தி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்குப் போனார். அங்கு அவருக்கு ஒரு கடையில் வேலை கிடைத்தது.

அங்கே வேலை செய்துவந்த நிலையில், சரியான சாப்பாடு கொடுக்காமல் இரவு, பகலாக வேலை செய்யச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். மூட்டை தூக்கும் வேலை செய்து வந்த அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அவருக்கு சிகிச்சை எதுவும் அளிக்காததுடன் தொடர்ச்சியாக மூட்டை தூக்க வற்புறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர் பல தடவை என்னிடம் தொலைபேசி மூலமாக சொல்லி வருத்தப்பட்டார்.

ஆனாலும், அதை எல்லாம் சமாளித்து விடுவதாகவே அவர் சொல்லி வந்தார். ஆனால், அங்கு அவரை அடிமையை விடவும் மோசமாக நடத்தியதால், அந்த இடத்தில் இருந்து தப்பி வெளியேறி விட்டார். அவருடைய பாஸ்போர்ட் உரிமையாளரிடம் சிக்கிவிட்டது. அங்குள்ள ஒரு தமிழரின் வீட்டில் தற்போது தலைமறைவாக இருந்துவருகிறார். அவரால் அங்கிருந்து தமிழகத்துக்கு வரமுடியாத நிலை இருக்கிறது. 

அதனால், அவரை மீட்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். அதை வலியுறுத்தியே ஆட்சியரை சந்தித்து மனு அளித்தேன். அவர் என்னுடைய கோரிக்கையை மிகுந்த கவனத்துடன் கேட்டார். அத்துடன், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார். சீக்கிரத்தில் அவரை மீட்டு சொந்த ஊருக்குத் திரும்ப உதவி செய்ய வேண்டும்’’என்று சொல்லிக் கலங்கினார். செல்வகுமாரின் சகோதரர் அந்தோணிராஜ் என்பவரும் மனு அளிக்க உடன் வந்திருந்தார்.