’தாமிரபரணியில் ஆழமாக மணல் அள்ளிக் கூறுபோட்டது போதும்!’- நல்லக்கண்ணு ஆவேசம்

’’தாமிரபரணி ஆற்றில் ஆழமாக மணல் அள்ளிக் கூறுபோட்டது போதும். இனி இந்த ஆற்றில் எந்த இடத்திலும் மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம்’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார். 

தாமிரபரணி அணைப்பகுதியில் நல்லகண்ணு ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அணை, 140 ஆண்டுகளைக் கடந்தும் தூர் வாரப்படாததால், விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் விளைவாக, கடந்த 2015 ஜூன் மாதம் அணையைத் தூர் வார பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஆனால், தூர் வாரும் பணி என்ற பெயரில் அதிக அளவில் மணல் கொள்ளை நடந்ததால், அணைப் பாதுகாப்புக் குழுவினர் அணையைத்  தூர் வாரத் தடை விதிக்கக்கோரி, பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதில், நல்லக்கண்ணு நேரில் ஆஜராகி மணல் கொள்ளைகுறித்து நீதிபதிகளிடம் விரிவாக எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அணையைத் தூர் வார இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது தீர்ப்பாயம். 

தாமிரபரணியிலுள்ள உறைகிணறு

கடந்த 4-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது, ஸ்ரீவைகுண்டம் அணையை அரசு மற்றும் மனுதாரர்கள் இந்த மாதம் நேரில் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, அணையைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு, ‘’ இந்த அணை 7 ரீச் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், முகப்புப் பகுதியிலிருந்து கடைசிப் பகுதிக்கு தூர் வாராமல், மணல் அதிகமுள்ள கடைசிப் பகுதியிலிருந்து முகப்பு நோக்கி தூர் வாரினார்கள். கூட்டுக் குடிநீர்த்திட்ட உறைகிணறுகளுக்கு அருகில் மணலை அள்ளியதால் உறைகிணறுகள் தண்ணீரின்றி வற்றிப் போய்விட்டது. விதிமுறைப்படி அணையின் மதகு பகுதியில்  எட்டடி ஆழத்தில் மணல் எடுக்காமல், 20 அடி ஆழம் வரை மணல் எடுத்திருக்கிறார்கள். தூர் வார வேண்டுமென்ற நோக்கமில்லாமல், அரசை ஏமாற்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல், கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தூர் வாருகிறோம் என்ற பெயரில், தாமிரபரணியை பல அடி அழத்தில் குழி தோண்டி, மணல் அள்ளிக் கூறுபோட்டது வரை போதும். இனி, ஒரு பிடி மணலைக்கூட அள்ள விட மாட்டோம். “ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!