வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (17/08/2017)

கடைசி தொடர்பு:13:30 (17/08/2017)

டெல்லியின் இறுதி எச்சரிக்கை... க்ளைமாக்ஸை நெருங்கும் அ.தி.மு.க. அணிகள் இணைப்புப் படலம்!

அ.தி.மு.க

டந்த சில மாதங்களாக அ.தி.மு.கவில் இப்படியொரு கூத்து நடந்துவந்தது. அரசு முறை பயணம் என்று சொல்லிக்கொண்டு அடிக்கடி டெல்லிக்குக் கிளம்பிப்போய் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி சந்தித்து வருகிறார். இந்தத் தகவல் தெரிந்ததும், தன் தரப்புக்கு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லியபடி ஓ. பன்னீர்செல்வமும் ஒடோடி போய் பிரதமரைச் சந்திப்பார். இருவேறு கோஷ்டியாக பிரிந்துகிடக்கும் இந்த இருவருமே ஒரே அணியில் இணைந்து தன்னைச் சந்திக்கவேண்டும் என்றுதான் பிரதமர் எதிர்பார்க்கிறார். பி.ஜே.பி. மேலிடமும் இதைத்தான் எதிர்பார்க்கிறது. ஆனால், இருவரும் முறுக்கிக்கொண்டிருந்து வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பி.ஜே.பி. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது எடப்பாடி, ஓ.பி.எஸ். இருவரும் சென்றிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் எடப்பாடிக்குக் கூடுதலாக முக்கியத்துவம் கொடுத்தார் பிரதமர். ஓ.பி.எஸ் தரப்பில் தரப்பட்ட பூச்செண்டை கூட பிரதமர் வாங்கிக்கொள்ளவில்லை. அடுத்து, துணை ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி கடந்த வாரம் நடந்தது. இதில் கலந்துகொள்ள வழக்கப்படி எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் சென்றிருந்தனர். போன இடத்தில், முதலில் எடப்பாடி, பிரதமரைச் சந்தித்தார். அவரைத்தொடர்ந்து, ஓ.பி.எஸ். அப்பாயின்ட்மென்ட்  கேட்க...உடனடியாகக் கிடைக்கவில்லை. வடமாநில கோவில் விசிட்களுக்கு ஓ.பி.எஸ். போய்விட்டார். பெரிய போராட்டத்துக்குப்பிறகே, மோடியிடம் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது ஓ.பி.எஸ்ஸிற்கு! இவருக்காக சிபாரிசு செய்தவர்களிடம் பிரதமர் சற்று கோபப்பட்டதாக சொல்கிறார்கள்.  

ஓ.பி.எஸ். பற்றி பி.ஜே.பி. நினைப்பது இதுதான்...

டெல்லியில் ஓ.பி.எஸ். விஷயத்தில் என்ன நடந்தது என்பது பற்றி பி.ஜே.பி. பிரமுகர் ஒருவரிடம் பேசியபோது, கூவத்தூரில் எடப்பாடி கோஷ்டியில் பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். இதை மறைத்து பிரதமர் மோடியிடம் ஓ.பி.எஸ். தரப்பில் அதிக எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாக ஒரு சீன் போட்டுவிட்டனர். இதை ஆரம்பத்தில் மோடியும் நம்பிவிட்டார். மேலும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை கூட்டத்தான், நாள்கள் கடத்தப்பட்டன. இறுதியில் பிரதமருக்குப் போன உளவுத்துறை ரிப்போர்ட்டில், ஓ.பி.எஸ். பக்கம் 12 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே இருப்பதாக தகவல் போனபோது, அதிர்ந்தே போய்விட்டார். அடுத்து, சசிகலாவை முதல்வர் ஆக்கும் முயற்சி நடந்தபோது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என பி.ஜே.பி. மேலிடம் ஓ.பி.எஸ்ஸிடம் சொன்னது. அதையும் ஓ.பி.எஸ் கேட்கவில்லை. அவசரஅவசரமாக ராஜினாமா செய்துவிட்டார். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, ஓ.பி.எஸ். மீது பி.ஜே.பி. மேலிடம் நம்பிக்கை இழந்தது. இப்படித்தான், மோடியிடமிருந்து படிப்படியாக ஓ.பி.எஸ். விலகினார். அதன்பிறகு, எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் தனித்தனியாக பிரிந்தனர். இருவரும் ஒரே அணியில் வரவேண்டும் என்று பலமுறை பி.ஜே.பி. சொல்லியதை ஓ.பி.எஸ். தரப்பினர் ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி தரப்பினர் எதற்கும் தயாராக இருந்தனர் என்பது வேறு விஷயம். இந்த நிலையில்தான், துணை ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி வந்தது. பிரதமரை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தபோது, இதுவரை இல்லாத அளவுக்குக் கோபத்தை காட்டிவிட்டார் மோடி எனறார். 

ஃபைனல் வார்னிங்

பிரதமர் கோபமாக இருக்கிறார். பார்த்துப் பேசுங்கள் என்கிற முன்னுரையுடன்தான் ஓ.பி.எஸ்ஸை பிரதமர் அலுவலகம் உள்ளே அனுப்பினர். என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் இருவரும் சேரவில்லையா? என்று எடுத்த எடுப்பிலேயே மோடி, ஓ.பி.எஸ்ஸை பார்த்து கேட்டாராம். தொடர்ந்து பேசும்போது, உங்கள் கோரிக்கைப்படி தினகரனை ஒதுக்கிவைத்து அறிக்கை வெளியிட்டுவிட்டார் முதல்வர். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றும்படி கேட்கிறீர்கள். இதை உடனே செய்யமுடியாது. நாங்கள்தான் பார்த்துக்கொள்கிறோம். வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்? நீங்களும், எடப்பாடியும் இனி பிரதமர் அலுவலகம் வந்தால், இணைந்தேதான் வரவேண்டும். தனித்தனியாக வரக்கூடாது என்று தெளிவாகவும், கறாராகவும் பேசினாராம். செம்மலைக்கு மந்திரி பதவியை ஓ.பி.எஸ். நினைவுப்படுத்த..அதற்கு பிரதமர், இதெல்லாம் உட்கட்சி பிரச்னைகள். நாங்கள் தலையிடமுடியாது நீங்கள் போய் முதலில் சேருங்க. இரண்டு பேரும் உட்கார்ந்து பேசி முடிவு எடுங்கள் என்று சொல்லிவிட்டாராம். பி.ஜே.பி மேலிட தரப்பில், இனி அடிக்கடி டெல்லிக்கு வந்து எங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கறாராக சொல்லிவிட்டார்களாம். 

சென்னையில் க்ளைமாக்ஸ்...

ஓ.பி.எஸ் கோஷ்டியின் முக்கியத் தலைவர்களுடன் ஆரம்பம் முதல் எடப்பாடி கோஷ்டி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறவர்கள் அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்! இந்த இருவரையும் ஓ.பி.எஸ். அழைத்துப் பேசினாராம். ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரிக்க, மத்திய அரசிடம் சொல்லி சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதை எடப்பாடி தரப்பினர் மறுத்துவிட்டனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. அதன் முடிவை பார்த்து, அதன்படி நடவடிக்கை எடுக்கலாம். தமிழக அரசு சார்பில் விசாரணை கமிஷன் அமைக்க நாங்கள் ரெடி. சசிகலாவை நீக்கவேண்டும் என்று அடுத்த கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்கு பதிலளித்த எடப்பாடி தரப்பினர், முதலில் நீங்கள் எங்களுடன் சேருங்கள். பிறகு, நாம் பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை நீக்குவோம். அதுதான், சட்டப்படி செல்லுபடியாகும் என்றார்களாம். இவை இரண்டு கோரிக்கைகள்தான் முக்கியமாகப் பேசப்பட்டதாம். கட்சியின் நிர்வாகப் பொறுப்பு ஓ.பி.எஸ்ஸுற்கும், ஆட்சிப்பொறுப்பு எடப்பாடிக்கும் என்று முடிவாகியிருக்கிறது. ஓ.பி.எஸ். சிபாரிசு செய்யும் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க சம்மதம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, பி.ஜே.பியுடன் கூட்டணி ஏற்படும் பட்சத்தில் மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். கோஷ்டியை சேர்ந்த மைத்திரேயன், எடப்பாடி கோஷ்டியை சேர்ந்த வேணுகோபால்...இருவருக்கும் இடம் பெற வைப்பது என்று முதல்கட்டமாக பேசியிருக்கிறார்கள். இதற்கு ஓ.பி.எஸ். சம்மதிக்கும் பட்சத்தில், வருகிற செப்டம்பர் 2ம் தேதியன்று வரும் குரு பெயர்ச்சிக்கு முன்பாக இரண்டு கோஷ்டிகள் இணைப்பு நடந்துவிடும். 

தினகரன் ரியாக்ஷன்...

தினகரனுடன் இதுவரை 23 எம்.எல்.ஏ-க்கள் சேர்ந்துள்ளனர். இன்னும் 9 பேர் வரவிருப்பதாக கணக்கு சொல்கிறார்கள். 32 எம்.எல்.ஏ-க்களுடன் போய் கவர்னரைச் சந்தித்துப் பேசலாமா? என்று அரசியல் அமைப்பு நிபுணர்களுடன் பேசிவருகிறார் தினகரன். ஆட்சியைக் கவிழ்ப்பது நோக்கம் இல்லை. ஆனால், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடியை நீக்கிவிட்டு, புதியவரை நியமிக்க சொல்வதுதான் தினகரனின் கோரிக்கை.
இதற்கு வாய்ப்புகள் உண்டா? என்று தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்டபோது, தற்போது எடப்பாடிக்கு 122 பேர் ஆதரவு இருப்பதாக சொல்லி வருகிறார்கள். ஓ.பி.எஸ்ஸுற்கு 11 பேர் ஆதரவு இருப்பதாக சொல்லுகிறார்கள். இந்த இரு கோஷ்டியிலிருந்து பெரும்பாலனவர்கள் எங்களிடம் வர சம்மதம் தெரிவித்துள்ளனர். முதல்கட்டமாக, எங்களுடன் 32 பேர்கள் வந்துவிட்டார்கள். பலர் பதவி பறிபோய்விடுமோ? என்கிற பீதியிலும், புதிய பதவி கிடைக்கலாம் என்கிற எதிர்பார்ப்பிலும் மேலும் பலர் எங்கள் பக்கம் வருவார்கள். ஆக, எங்களிடம் மெஜாரிட்டி எம்.எல்.ஏ-க்கள் வரும்போது பழைய முதல்வரை மாற்றிவிட்டு புதியவரை நியமிக்க நாங்கள் சிபாரிசு செய்வோம் என்றார்.

 தினகரன் கோஷ்டியின் புதிய முதல்வர் சாய்ஸ் செங்கோட்டையன். துணை முதல்வர்  தங்க. தமிழ்ச்செல்வன். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்