வெளியிடப்பட்ட நேரம்: 11:15 (17/08/2017)

கடைசி தொடர்பு:11:27 (17/08/2017)

நீட் விவகாரம்: நளினி சிதம்பரத்துக்கு எதிராகக் களம் இறங்கும் அரியலூர் மாணவி!

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கில், எதிர் மனுதாரராக அரியலூரைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதா வாதிட உள்ளார். இதற்காக, அவர் டெல்லி சென்றுள்ளார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவர் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார். ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். இவரது கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது. மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட அனிதாவுக்கு, நீட் தேர்வு பெரும் இடியாக விழுந்தது.

இதனிடையே, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி, தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரும் மனுவை, சில மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர் என்றும், இந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் நேற்று முறையிட்டார்.

இதனிடையே, இந்த மனுவில் எதிர் மனுதாரராக அனிதா வாதிட உள்ளார். அப்போது, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்கவேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும்; மருத்துவராகும் கனவு பறிபோய்விடும்" என உச்ச நீதிமன்றத்தில் அனிதா எடுத்துரைக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லி சென்றுள்ளார்.