வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (17/08/2017)

கடைசி தொடர்பு:16:33 (12/07/2018)

ராமேஸ்வரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மீனவர் உயிரிழப்பு

ராமேஸ்வரம் அருகே உள்ள ஏரகாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் டெங்குக் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.

ராமேஸ்வரம் அருகே உள்ளது ஏரகாடு கிராமம். இங்கு ஏராளமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகன் வெங்கடேஷ்வரன் (23). மீனவரான இவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வெங்கடேஷ்வரனை அவரது குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோய் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தனியார் மருத்துவமனையில் நான்கு மாதங்களாகப் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷுக்கு கடந்த மாதம் டெங்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறியுள்ளனர் தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர். பின்னர் டெங்குக் காய்ச்சலுக்கு அந்தத் தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சை அளித்த பின் ஏரகாடு கிராமத்துக்கு வெங்கடேஷ்வரனை அனுப்பி வைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலிருந்தபடி சிகிச்சை பெற்று வந்த வெங்கடேஷ்வரன் நேற்று இரவு திடீரென மயங்கிக் கிடந்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் வெங்கடேஷ்வரனை உடனடியாக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் வெங்கடேஷ்வரன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தார்.

இதன் பின் உயிரிழந்த வெங்கடேஷ்வரன் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து கொண்ட விவரத்தினை அவரது குடும்பத்தினர் மூலம் அறிந்த மருத்துவர்கள் அவரது உடலைப் பிரேதப் பரிசோதனை செய்த பின்னரே குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் போலீஸாருக்கும் இது பற்றி மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகர் காவல் நிலைய போலீஸார் மீனவர் வெங்கடேஷ்வரன் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.