''தமிழகத்தின் அடுத்த அம்மா மோடிதான்!''- காரணம் சொல்லும் தமிழிசை | modi is the new 'amma' of tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (17/08/2017)

கடைசி தொடர்பு:12:35 (17/08/2017)

''தமிழகத்தின் அடுத்த அம்மா மோடிதான்!''- காரணம் சொல்லும் தமிழிசை

தமிழிசை

'தமிழக மக்களின் நலனே முக்கியம் என்று ஒரு தாய் போல செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தின் அம்மா' என்று தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் தமிழிசை கூறினார்.

சென்னை சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கோவிலம்பாக்கம் நன்மங்கலம் ஊராட்சியில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் விழாவில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ''காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு விலை ஆயிரத்துக்கு மேல் இருந்தது. சிலிண்டர் புக் செய்துவிட்டு காத்திருக்க வேண்டும். ஆனால், இப்போது எஸ்.எம்.எஸ் போட்டவுடன் வீடு தேடி சிலிண்டர் வருகிறது. மானியப் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு சென்று விடுகிறது. இப்போது, சிலிண்டர் விலையும் 500 ரூபாய் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. இந்நிலையில்தான் மோடி, வசதி உள்ளவர்கள் சிலிண்டர் மானியத்தை விட்டுத்தருமாறு கேட்டுக் கொண்டார். பல லட்சம் பேர் நாடு முழுவதும் விட்டுக் கொடுத்துள்ளனர். அதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

ஆதார் எண்களை ரேசன் கார்டுடன் இணைத்ததால் தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இனி, ஒவ்வொரு கார்டுதாரர்களுக்கும் அவர்களுக்கு உரிய அரிசி, சர்க்கரை, பருப்பு கண்டிப்பாகக் கிடைக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் வந்ததால் ரேசன் கடையே இருக்காது என்று பொய் பிரசாரம் செய்கிறார்கள். அதெல்லாம் வீண் வதந்தி. அனைவரும் பசி இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது ஒரு குடும்பத்துக்கு குறைந்தபட்சம் 20 கிலோ அரிசி உறுதியாகக் கிடைக்கிறது. இனியும், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால் இந்தச் சட்டத்தின் மூலம் இனி 25 கிலோ அரிசி பெற்றுக் கொள்ளலாம். 6 பேர் இருந்தால் 30 கிலோ அரிசி வாங்கிக் கொள்ளலாம். இதெல்லாம் தெரியாமல் என்னென்னவோ பேசி வருகிறார்கள்.

பா.ஜ.க பிடியில் தமிழகம் இருக்கிறது என்று ஒரு பிரசாரம் நடக்கிறது. மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து செயல்படும் போது மத்திய அரசின் திட்டங்கள், மாநில மக்களை நோக்கி ஓடோடி வரும். வடநாட்டில் ஒருவர் என்னிடம் நரேந்திர மோடியைத் தமிழகத்தின் அம்மா என்று சொல்கிறார்களே என்று கேட்டார். அதை நான் மறுக்கவில்லை. அம்மா என்கிற நிலையில் இருந்து தமிழகத்துக்கு நல்லது செய்து வருகிறார் மோடி. அதனால் அப்படிச் சொல்வார்கள். எதிர்மறையான விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் மக்களுக்குத் தேவையான திட்டங்களை மோடி செய்து வருகிறார். அவர் எதைச் செய்தாலும் நல்லதுதான் செய்வார். தாயைப் போல இந்த நாட்டு மக்களுக்குத் தேவையானதை தொலைநோக்குப் பார்வையோடு செய்து வருகிறார். எனவேதான் பா.ஜ.க நாடு முழுவதும் வளர்ந்து கொண்டு செல்கிறது'' என்றார்.


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க