வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (17/08/2017)

கடைசி தொடர்பு:13:40 (17/08/2017)

யோகி ஆதித்யநாத் தொகுதியில் வேகமாகப் பரவிவரும் மூளைக்காய்ச்சல்!

குழந்தைகள்

த்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூரில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதே, பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணம். ஆக்ஸிஜன் சப்ளைக்கான நிலுவைத் தொகையைச் செலுத்தாத உத்தரப்பிரதேச அரசே, குழந்தைகளின் மரணத்துக்குப் பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பிவந்தன.

மேலும், மூளைக்காய்ச்சல் பிரச்னையாலும் குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக, கிழக்கு உத்தரப் பிரதேசப் பகுதிகளில், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் வேகமாகப் பரவிவருவதாகவும், இந்த நோயைக் கட்டுப்படுத்த உரிய தடுப்பூசியை நோய் பாதித்த குழந்தைகளுக்குப் போடுவதிலும் அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்களவைத் தொகுதியான கோரக்பூரிலுள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நாள்தோறும் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். மேலும், 70-க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.