அ.தி.மு.க-வுக்கு தீபாவின் அதிர்ச்சி..! - தேர்தல் ஆணையத்திடம் 13 பக்க ஆதாரம்

ஜெ. தீபா


இந்தியத் தேர்தல் ஆணையத்திடம், அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் 13 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இது, நிச்சயம் அ.தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக இருந்த அ.தி.மு.க., மேலும் பிளவுபட்டுள்ளது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, அந்த அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணி உருவானது. சசிகலாவால் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலா அணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகிறார். முன்னதாக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையைத் தொடங்கினார். அதன்பிறகு, அ.தி.மு.க-வில் அணிகள் உருவாகியதால், தீபாவும் அ.தி.மு.க. ஜெ. தீபா அணி என்று மாற்றிக்கொண்டார். 
 சசிகலா குடும்பத்தினருக்கு எதிராகக் களமிறங்கிய தீபா, போயஸ் கார்டன் வீட்டுக்கு உரிமை கோரிவருகிறார். தொடர்ந்து, பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளார். 'சசிகலாவின் நியமனம் செல்லாது' என்று அ.தி.மு.க. ஜெ. தீபா அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் இன்று 13 பக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அ.தி.மு.க. ஜெ. தீபா அணியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் சே.பசும்பொன் பாண்டியன், வழக்கறிஞர் வெங்கட் ஆகியோர் கூறுகையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல்செய்யப்பட்ட அஃபிடவிட்களில் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு அணிகளுக்கும் ஆதரவாக ஒரே நபர் அஃபிடவிட்களைத் தாக்கல்செய்துள்ளார். சசிகலா, தினகரனை ஆதரித்து அஃபிடவிட்களைத் தாக்கல்செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர், தற்போது அவர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்.

தலைமைச் செய்தி தொடர்பாளர் சே.பசும்பாண்டியன், வழக்கறிஞர் வெங்கட்

 
 'தினகரனின் பொதுச் செயலாளர் நியமனம் சட்டவிரோதமானது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி நிறைவேற்றிய தீர்மானத்தை, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இவையெல்லாம் அ.தி.மு.க-வை பலவீனப்படுத்திவருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோரின் செயல்பாடுகள், காமெடிக் காட்சிகள் போல உள்ளன. பதவியைக் காப்பாற்றிக்கொள்ள, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைவதாகச் சொல்கின்றனர். 
 எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வளர்த்த அ.தி.மு.க-வை அழிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் தினகரனும் போட்டிபோட்டு தீயாய் வேலைபார்க்கின்றனர். அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையால், உண்மையான தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, தீபா அணி சார்பில் சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன விசாரணை, தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. சசிகலாவின் நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும், பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தலை நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும். 2013ல் அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ள ஒரு கோடியே 65 லட்சம் பேர் வாக்களிக்க, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் கோரிக்கைகளுக்குத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்"என்றார். 
ஏற்கெனவே, சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம், இரட்டை இலை சின்னம் ஆகிய விசாரணை, தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இந்த விசாரணையின் முடிவு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியோரில் யாருக்கு சாதகமாக அமையும் என்பது தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தீபா அணி, தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள 13 பக்க புகார் மனு, புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபா அணியின் இந்தத் திடீர் நடவடிக்கை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!